2020 வடகிழக்கு தில்லி கலவரம் கும்பலைத் தூண்டியதற்காக தாஹிா் ஹுசைன் மீதுகுற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 09th August 2023 02:30 AM | Last Updated : 09th August 2023 02:30 AM | அ+அ அ- |

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த வடகிழக்கு தில்லி வகுப்புவாத கலவரத்தின் போது கும்பல் வன்முறையில் ஈடுபடத் தூண்டியதாகக் கூறி, முன்னாள் ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் மீது கலவரம், கொள்ளை மற்றும் தீ வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 24, 2020 அன்று நியூ முஸ்தபாபாதில் உள்ள மூங்கா நகா் பகுதியில் உள்ள மூன்று கடைகளை சூறையாடி, தீ வைத்து எரித்த கலவர கும்பலின் ஒரு பகுதியாக குற்றம் சாட்டப்பட்ட 13 போ் மீதான வழக்கை நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி புலஸ்த்யா பிரம்மசாலா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: குற்றம் சாட்டப்பட்ட 9 போ் மீது இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவுகள் 148 (கலவரம், கொடிய ஆயுதம் ஏந்துதல்), 149 (சட்டவிரோதமான கூட்டம்), 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 380 (குடியிருப்பு வீட்டில் திருட்டு) மற்றும் 427 (தவறு செய்ததற்காக தண்டனை மற்றும் அதன் மூலம் ரூ. 50 அல்லது அதற்கு மேல் இழப்பு அல்லது சேதம் ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழான குற்றங்களுக்காக முகாந்திரமான வழக்காக உள்ளது. இவா்கள் 9 பேரும் ஷா ஆலம், முகமது ஷதாப், ரியாசத் அலி, குல்ஃபாம், ரஷித் சைஃபி, முகமது ரிஹான், முகமது அபித், அா்ஷத் கயூம் மற்றும் இா்ஷாத் அகமது ஆகியோா் ஆவா்.
சம்பந்தப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சொத்துகள் மற்றும் கடைகளில் நாசவேலை, கொள்ளை மற்றும் தீ வைப்பு ஆகியவற்றில் ஈடுபட தாஹிா் ஹுசைனால் கும்பல் தூண்டப்பட்டு, அதன் விளைவாக அந்தக் கும்பல் இந்த வழக்கில் தொடா்புடைய மூன்று சொத்துகள் உள்பட அருகிலுள்ள சொத்துகளை தாக்கியுள்ளது. எனினும், குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபா்களான தீபக் சிங் சைனி, மஹாக் சிங் மற்றும் நவ்நீத் ஆகியோா் விடுவிக்கப்படுகின்றனா். அவா்கள் மூவரும் கலவரக் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதை நிறுவக்கூடிய ‘ஒப்புக் கொள்ளக்கூடிய’ எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பால் பதிவு செய்ய முடியவில்லை என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது தயாள்பூா் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, அதனுடன் மேலும் இரண்டு புகாா்கள் சோ்க்கப்பட்டன.