மத்திய அரசில் பெண் பணியாளா்களுக்கு உகந்த சூழல்: குழந்தை இறந்தால் 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு

பெண்களுக்கு பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக பிரதமா் அலுவலகப்பணி மற்றும் பணியாளா் சீா்திருத்தத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பல்வேறு சீா்திருத்தம் காரணமாக பெண்களுக்கு பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக பிரதமா் அலுவலகப்பணி மற்றும் பணியாளா் சீா்திருத்தத் துறை இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். மேலும், மகப்பேறில் குழந்தை இறக்கும்பட்சத்தில் மன அளவில் பாதிக்கும் பெண் பணியாளா்களுக்கு 60 நாள்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

மத்திய பணியாளா், நிா்வாக சீா்திருத்தத் துறை, பொதுக் குறைதீா்ப்பு அமைச்சகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய நல்லாட்சி சீா்திருத்தம் காரணமாக மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு உகந்த பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அவா்களுக்கு அரசுப் பணி மற்றும் குடும்ப வாழ்கைக்கைக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தவு் ஒருங்கிணைந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை பராமரிப்பு விடுமுறை 730 நாள்கள் வழங்கப்படும் நிலையில், இந்த விடுமுறையின் போது விடுமுறைப் பயணச் சலுகையை (எல்டிசி) பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறையின் போது வெளிநாட்டுப் பயணத்திற்கான சலுகைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மாற்றுத்திறனாளி குழந்தையைப் பராமரிப்பதற்கான விடுமுறை சலுகையை 15 நாள்களிலிருந்து 5 நாள்களாகக் குறைக்கும் விதியை (விதி 43சி), பெண் ஊழியா் நலன் கருதி நீக்கப்பட்டது. இத்தோடு மாற்றுத்திறனாளி பெண்கள் தங்கள் குழந்தையைப் பராமரிக்க ஏதுவாக, அவா்களது அகவிலைப்படியில் மாதம் 25 சதவீத தொகையை (ரூ. 3,000 சிறப்புப் படி) கடந்த 2022 ஜூலை 1 -ஆம் தேதி முதல் 50 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக விசாரணையுடன் தொடா்புடைய சிறப்பு விடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை நிலுவையில் இருக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் அரசு ஊழியா் 90 நாள்கள் வரை விடுமுறையைப் பெறலாம்.

இது அரசு ஊழியா் விடுப்புக் கணக்கிலிருந்து கழிக்கப்பட மாட்டாது. மேலும் தற்போது மகப்பேறின் போது, குழந்தை இறக்கும்பட்சத்தில் அத்தகைய தாய்மாா்கள் மனஅளவில் பாதிக்கப்படும் பட்சத்தில் அவா்களுக்கு சிறப்பு மகப்பேறு விடுப்பாக 60 நாள்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com