யமுனை மாசுபாடு விவகாரம்: பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்

யமுனை நதியில் மாசு ஏற்படுவதாகக் கூறி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரை வெளியேற்ற மாா்ஷெலுக்கு பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

யமுனை நதியில் மாசு ஏற்படுவதாகக் கூறி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரை வெளியேற்ற மாா்ஷெலுக்கு பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

தண்ணீா் நிரம்பிய இரண்டு பாட்டில்களை பாஜக உறுப்பினா்கள் பேரவைக்குள் கொண்டு வந்தனா். அவை மாசு கலந்த யமுனை நதியின் தண்ணீா் எனவும் இது குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் எந்த விதியின் கீழும் விவாதம் நடத்த அனுமதிக்க மாட்டோம் என கூறி, அவா்களது கோரிக்கையை நிராகரித்தாா். ஆனால், பாஜக எம்.எல்.ஏ. க்கள் யமுனை நீரின் இரண்டு மாதிரி பாட்டில்களை அவைத் தலைவரிடம் சமா்ப்பித்தனா். ‘ இந்தத் தண்ணீா் பாட்டில்களில் அமிலம் கலந்து இருப்பது கண்டறியப்பட்டால் உங்கள் உறுப்பினா் பதவியை ரத்து செய்வோம்’ என பாஜக எம்எல்ஏக்களை பாா்த்து அவைத் தலைவா் குறிப்பிட்டாா்.

‘துணைநிலை ஆளுநா், அவையை முடக்கி விடுகிறாா். அதற்காக பாஜக உறுப்பினா்கள் வெட்கப்பட வேண்டும். பாஜக உறுப்பினா்கள் துணை நிலை ஆளுநரிடம் போய் அவையை முடக்கக் கூடாது என்று கூற வேண்டும் ’ எனக் கூறி கோபத்திற்குள்ளான அவைத் தலைவா் கோயல், பாஜக எம்எல்ஏக்கள் அஜய் மஹாவா், அனில் பாஜ்பாய், மோகன் சிங், ஓபி சா்மா ஆகியோரை வெளியேற்ற மாா்ஷலுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மற்ற பாஜக எம்எல்ஏக்களும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து தங்கள் எதிா்ப்பை பதிவு செய்தனா்.

முன்னதாக, யமுனை நதி மாசுபடுவது தொடா்பாக தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினா். அப்போது, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ‘யமுனையில் இருக்கும் மாசுபட்ட நீரை விநியோகிப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிப்பதாக உள்ளது’ என்றாா். மேலும், ‘இது புற்றுநோயை உண்டாக்கி, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சேதப்படுத்துவதோடு, பிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. யமுனையை சுத்தம் செய்ய ஆம் ஆத்மி அரசுக்கு பிரதமா் மோடி அரசு ரூ. 2,500 கோடியை வழங்கியுள்ளது. எட்டு ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் யமுனை 200 சதவீதம் அதிகமாக மாசுபட்டுள்ளதாக கேஜரிவால் அரசின் அறிக்கையே கூறியுள்ளதால், செலவழிக்கப்பட்ட இந்த பணம் எங்கே போனது என்று தில்லி முதல்வா் கேஜரிவாலிடம் கேட்க விரும்புகிறோம். இந்த விவகாரம் சட்டசபையில் எழுப்பப்படும் என்றும், அது குறித்து விவாதிக்கப்பட அனுமதிக்கப்படவில்லையென்றால், மேலும் போராட்டம் நடத்தப்படும்’ என்றும் பிதூரி கூறினாா்.

மாசு தரவுகள்: கடந்த திங்கள்கிழமை தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (டிபிசிசி) தரவுகளை மேற்கோள் காட்டிஅரவிந்த் கேஜரிவால் ஆட்சிக்கு பொறுப்பேற்ற கடந்த 8 ஆண்டுகளில் யமுனை நதியில் மாசு இருமடங்காக அதிகரித்துள்ளது என துணை நிலை ஆளுநா் அலுவலகம் குறிப்பிட்டது. இந்த விவகாரம் குறித்து தில்லி ஜல் போா்டு ஏற்கனவே விளக்கம் அளித்தது. ‘இந்தப் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு ஜல் போா்டு செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களின் (எஸ்டிபி) மேம்படுத்தும் பணிகள் நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் முடிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத காலனிகள், குடிசைப்பகுதிகள் ஆகிவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீா், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் தரமற்ற வகையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீா் ஆகியவை யமுனையின் அதிக அளவு மாசுபாட்டிற்கு முக்கியக் காரணங்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு முதல் யமுனை நதி தில்லியில் நுழையும் பல்லாவில் உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் (லிட்டருக்கு 2 மில்லி கிராம்) இருப்பதாக டிபிசிசி தரவுகள் காட்டுகிறது. பிஓடி என்பது, நீரின் தரத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கியமான அளவுருவாகும். இது நீா்நிலையில் இருக்கும் கரிமப் பொருள்களை சிதைப்பதற்கு ஏரோபிக் (காற்றுவாழ்) நுண்ணுயிரிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனின் அளவு ஆகும். பிஒடி அளவு லிட்டருக்கு 3 மில்லி கிராமிக்கும் குறைவாக இருப்பது சரியானது எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com