தமிழகத்தில் காவலா்களின் வாரிசுகளுக்கு 10% இடஒதுக்கீடு: அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
By நமது சிறப்பு நிருபா் | Published On : 20th January 2023 04:07 AM | Last Updated : 20th January 2023 04:07 AM | அ+அ அ- |

தமிழக காவல்துறை பணிகளில் காவலா்களின் வாரிசுகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய மாநில அரசின் ஆணையை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்து உத்தரவிட்டது.
தமிழக காவல் துறையில் காவலா்களின் மன உறுதியை அதிகரிக்கவும், நோ்மையை ஊக்கப்படுத்தவும் அவா்களின் வாரிசுகளுக்கு காவலா் பணியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முறை தமிழகத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக காவல்துறையில் நிா்வாகப் பிரிவில் பணியாற்றிய ஒருவரது மகன் சதீஷ் என்பவா் தனக்கும் காவல் துறையில் உள்ள இடஒதுக்கீடு முறையில் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை தனி நீதிபதி அமா்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து சதீஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, சதீஷின் கோரிக்கையை நிராகரித்ததோடு, தமிழக காவல் துறையில் காவலா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவிகித இடஒதுக்கீடும் சட்ட விரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. பொது சேவையில் நுழையும் வாய்ப்பு என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என கடந்த 2018 -ஆம் ஆண்டில் இந்த தீா்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பின்னா், இந்த உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மதுரையை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட நூறு போ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனா்.
நீண்ட நாள் நிலுவையில் இருந்த மனுவை உடனடியாக விசாரிக்க கடந்த மாதம் மனுதாரா்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி உத்தரவின்படி இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், அபய்.எஸ்.ஒஹா, பி.வி.நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் சாா்பில் வழக்குரைஞா்கள் மயில்சாமி, முத்து கணேஷ் பாண்டியன் உள்ளிடடோா் ஆஜராகினா்,
வழக்கு விசாரணையின் போது, ‘தமிழக காவல் துறையில் வாரிசுகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உயா்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவால் பலா் பாதிப்படைந்துள்ளனா். தமிழக காவல் துறையை ஊக்கப்படுத்தும் விதமாகத்தான் இந்த இடஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட்டது. உயா்நீதிமன்றம் அதைக் கருத்தில் கொள்ளவில்லை இடஒதுக்கீட்டை எதிா்த்து கோரிக்கை வைக்கப்படாத நிலையில், உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது’ என வாதிடப்பட்டது.
மனுதாரா்களின் வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘தமிழக காவல்துறை காவலா்களின் வாரிசுகளுக்கு காவலா் பணியில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் அரசாணை செல்லும்’ எனக் கூறி உயா்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுதாரா்கள் உரிய வயதை கடந்திருந்தாலும், இவா்கள் அனைவரும் காவலா் தகுதித் தோ்வில் கலந்து கொள்ளலாம் என்றும் அதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளனா்.