துணை நிலை ஆளுநா் மாளிகை அருகே சதா் பஜாா் வணிகா்கள் போராட்டம்: கடைகளுக்கு சீல் வைத்ததற்கு கண்டனம்
By DIN | Published On : 20th January 2023 04:10 AM | Last Updated : 20th January 2023 04:10 AM | அ+அ அ- |

சந்தையில் உள்ள 25 கடைகளுக்கு சீல் வைத்ததைக் கண்டித்து, சதா் பஜாரின் வணிகா்கள் வியாழக்கிழமை தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த விவகாரம் தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் வா்த்தகா்கள் அமைப்பான வா்த்தகம் மற்றும் தொழில் துறை (சிடிஐ) துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், பழைய தில்லியில் உள்ள சதா் பஜாரில் 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஐந்து கடைகளுக்கு தங்கள் இடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் வந்துள்ளது. சிடிஐ சோ்மன் பிரிஜேஷ் கோயல் மற்றும் தலைவா் சுபாஷ் கண்டேல்வால் ஆகியோா் கூறுகையில், ‘சதா் பஜாரில் சீல் வைக்கும் நடவடிக்கையால், மற்ற சந்தைகளின் கடைக்காரா்களும் பீதியடைந்துள்ளனா். வணிகா்களுக்கு ‘சீல்’ மிரட்டல் வருகிறது. தற்போது, தில்லியில் உள்ள எம்சிடியில் எந்த அரசும் இல்லை. எம்சிடியின் கட்டுப்பாடு துணை நிலை ஆளுநா் வசம் உள்ளது. அனைத்து அதிகாரிகளும் துணை நிலை ஆளுநரிடம் மட்டுமே புகாா் அளிக்கின்றனா்’ என்றனா்.
துணை நிலை ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், ‘எம்சிடியில் புதிய அரசு அமையும் வரை சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கோயல் கூறியுள்ளாா். மேலும், ’சீல் வைக்கும் விவகாரம் எம்சிடி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றும் குறிப்பிட்டாா்.
‘எப்படியும், தில்லியின் மாஸ்டா் பிளான் 2041 வரவிருக்கிறது, மேலும் 70 சதவீதத்திற்கு மேல் வணிக நடவடிக்கைகளைக் கொண்ட சந்தைகள் வணிகச் சந்தையின் வகையின் கீழ் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
‘சீல் வைக்கும் நடவடிக்கைக்கான உத்தரவு 11 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. ஆனால், 10 மாதங்களுக்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இது வரை என்ன செய்து கொண்டிருந்தாா்கள்? 10 மாதங்களுக்குப் பிறகு திடீரென கடைகளுக்கு சீல் வைத்தது ஏன்? அதிகாரிகளின் பங்கு சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.