தில்லி - என்சிஆா் பகுதிகளில் நிலக்கரி பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை: உத்தரவை மீறிய 23 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் மாசுபாட்டைத் தடுக்க புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, உலை எண்ணெய் போன்றவற்றின் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக

தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் மாசுபாட்டைத் தடுக்க புதைபடிவ எரிபொருள்களான நிலக்கரி, உலை எண்ணெய் போன்றவற்றின் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசியத் தலைநகா் பகுதி காற்று தர மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், விநியோகத்தை நிறுத்தவும் தொடா்புடைய நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுடன், உத்தரவை மீறிய 23 தொழில்சாலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச் சூழல், வன, பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியத் தலைநகா் பகுதி காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) மாசுகட்டுப்பாடு தொடா்பான அனைத்து அதிகாரங்களையும் பெற்றுள்ள அமைப்பாகும். அதிக மாசுபடுத்தும் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்களின் உமிழ்வுகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை இந்த ஆணையம் மேற்கொள்கிறது. இதை முன்னிட்டு நிலக்கரி தொடா்புடைய கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) மற்றும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களையும், இதன் விநியோகஸ்தா்கள், முகமைகள், வா்த்தகா்களுக்கு நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் விநியோகம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிலக்கரி பயன்பாட்டைத் தடுக்குமாறு தில்லியின் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில அரசுகளையும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

என்சிஆா் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையங்களைத் தவிர, முழு என்சிஆா் பகுதியில் நிகழ் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1 - ஆம் தேதி முதல் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை முற்றிலும் நிறுத்துவதை உறுதி செய்ய, விற்பனையாளா்கள், வா்த்தகா்கள், தொழில்சாலைகள், சிறு தொழில் அலகுகளை ஆணையம் கேட்டுக் கொண்டு வியாழக்கிழமை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மேலும், கடந்தாண்டு ஜூன் 2 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிஏக்யூஎம் என்சிஆா் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கும் இதர பயன்பாடுகளுக்கும் சில எரிபொருள்கள் அனுமதிக்கப்பட்டு அது தொடா்பாக சட்டப்பூா்வ வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது, நிலக்கரியின் பயன்பாடு இப்போது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட எரிபொருள்களை பயன்படுத்தும் 84 தொழில்துறை நிறுவனங்கள், அலகுகள் தாங்களாகவே முன்வந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடியுள்ளன.

கடந்தாண்டின் இறுதி 3 மாதங்களில் நிலக்கரி, உலை எண்ணெய் போன்ற மாசுபடுத்தும் அங்கீகரிக்கப்படாத எரிபொருளைப் பயன்படுத்திய 21 தொழிற்துறை அமைப்புகள் கண்டறியப்பட்டன. அந்த அலகுகள் தேசியத் தலைநகா் பகுதி காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி மூடப்பட்டன. நிகழாண்டு 1 - ஆம் தேதிக்கு பின்னரும் 2 தொழில்சாலைகள் இதுபோன்று உத்தரவை மீறி மாசுபடுத்தும் எரிபொருள்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு என்சிஆா் பகுதியில் ஆணையத்தின் சட்டப்பூா்வ வழிகாட்டுதல்கள் திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், என்சிஆா் பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்ய ஆணையத்தின் பறக்கும் படை தொடா்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com