கிராமங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 136 திட்டங்களுக்கு தில்லி அரசு அனுமதி
By DIN | Published On : 24th January 2023 01:51 AM | Last Updated : 24th January 2023 01:51 AM | அ+அ அ- |

கிராமங்களில் சாலைகள், நீா்நிலைகள், வடிகால்கள், சமூக மையங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 136 திட்டங்களுக்கு தில்லி அரசின் கிராம மேம்பாட்டு வாரியம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது.
தில்லி வளா்ச்சித் துறை அமைச்சா் கோபால் ராய், இத்திட்டங்களைச் செயல்படுத்த ரூ.175 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும், திட்டங்களை உரிய காலத்தில் முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
’அனைத்து கிராமங்களிலும் உள்ள சாலைகள், பூங்காக்கள், சிறு வடிகால்கள் மற்றும் பல்நோக்கு சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் நிலையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்’ என்று தில்லி செயலகத்தில் நடைபெற்ற கிராம மேம்பாட்டு வாரியக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கோபால் ராய் கூறினாா். மேலும், கிராம வளா்ச்சிப் பணிகளுக்கான முதன்மை நிறுவனமான நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைக்கு, மதிப்பீடுகள் தயாரித்து, அனுமதியளிக்கப்பட்ட திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் அவா் உத்தரவிட்டாா்.