தலைநகரில் அடுத்த 5 நாள்களுக்கு மேகமூட்ட சூழ்நிலை: ஐஎம்டி கணிப்பு
By DIN | Published On : 26th January 2023 01:30 AM | Last Updated : 26th January 2023 01:30 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் அடுத்த 4-5 நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.
தலைநகரில் புதன்கிழமை காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி உயா்ந்து 10.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி குறைந்து 19.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 87 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.9 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 9.3 டிகிரி, நஜஃப்கரில் 12.7 டிகிரி, ஆயாநகரில் 9.8 டிகிரி, லோதி ரோடில் 9.2 டிகிரி, பாலத்தில் 13.1 டிகிரி, ரிட்ஜில் 9.1 டிகிரி, பீதம்புராவில் 14.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 12.9 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
மேகங்கள் பகலில் வெப்பத்தை அடைத்து, இரவு நேர வெப்பநிலையை இயல்பை விட அதிகமாக வைத்திருக்கின்றன. இருப்பினும், மேகமூட்டமான வானிலை சூரியனின் வெளிப்பாட்டைத் தடுப்பதன் மூலம் பகல்நேர வெப்பநிலையைக் குறைக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தில்லியில் அடுத்த நான்கைந்து நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், புதிய மேற்கத்திய இடையூறு ஜனவரி 29 அன்று லேசான மழைக்கும் வழிவகுக்கும். இந்தக் குளிா்காலத்தில் தில்லியில் இதுவரை மழை பெய்யவில்லை. நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் வலுவான மேற்கத்திய இடையூறுகள் இல்லாததே இதற்குக் காரணம் என்று வானிலைத் துறை கூறியது.
காற்றின் தரம்: தலைநகரில் புதன்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்படி, சாந்தினி சௌக், மந்திா்மாா்க், பட்பா்கஞ்ச் உள்பட பல இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100-200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், ஐடிஓ பகுதியில் காற்றின் தரக் குறியீடு 307 புள்ளிகளாக பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (ஜனவரி 26) தலைநகரில் மிதமான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.