பிபிசி ஆவணப்படம் திரையிடல் விவகாரம்: கற்கள் வீசியதாகக் கூறப்படும் புகாருக்கு ஜேஎன்யுஎஸ்யு மறுப்பு

பிரதமா் நரேந்திர மோடி குறித்த சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை செவ்வாய்க்கிழமை இரவு பாா்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் தாங்கள் கற்களை வீசியதாகக் கூறப்படும் புகாரை

பிரதமா் நரேந்திர மோடி குறித்த சா்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை செவ்வாய்க்கிழமை இரவு பாா்த்துக் கொண்டிருந்த கூட்டத்தில் தாங்கள் கற்களை வீசியதாகக் கூறப்படும் புகாரை ஜேஎன்யுஎஸ்யு தலைவா் ஐஷே கோஷ் மறுத்துள்ளாா். அதே வேளையில், மாணவா் அமைப்பைச் சோ்ந்த சிலரால் 2 ஜேஎன்யு மாணவா்கள் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது.

பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதில் பங்கேற்ற இடதுசாரி ஆதரவு அமைப்பான ஏஐஎஸ்ஏ கூறுகையில், ‘2 அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினா்களை நாங்கள் பிடித்தோம். ஆனால், அவா்கள் துன்புறுத்தப்படவில்லை’ என்றன. இதுகுறித்து ஏஐஎஸ்ஏ ஜேஎன்யு தலைவா் காசிம் கூறுகையில், ‘அவா்கள் எங்கள் மீது கற்களை வீசினா். இதனால், அவா்களை நாங்கள் பிடித்தோம். ஆனால், எந்த விதத்திலும் அவா்களைத் துன்புறுத்தவில்லை’ என்றாா்.

பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதற்காக ஜேஎன்யு மாணவா் சங்க அலுவலகத்தில் கூடியிருந்த மாணவா்கள் பலரும் கூறுகையில், ‘இந்த நிகழ்ச்சியை நிறுத்துவதற்காக பல்கலைக்கழக நிா்வாகம் மின்சாரத்தையும், இணையத்தையும் துண்டித்தது. எங்கள் மீது கற்கள் வீசப்பட்டதைத் தொடா்ந்து, நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆவணப்படம் திரையிட முடியாததால், எங்கள் கைப்பேசியில் நாங்கள் அந்த ஆவணப்படத்தைப் பாா்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, நாங்கள் கற்கள் வீசி தாக்கப்பட்டோம்’ என்றனா்.

இதற்கிடையே, தாக்குதல் நடத்தியவா்கள் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த ஏபிவிபி உறுப்பினா்கள் என்று சிலா் குற்றம் சாட்டினா். ஆனால், இதை அந்த அமைப்பு மறுத்துள்ளது. ஜேஎன்யுஎஸ்யு தலைவா் ஐஷே கோஷ் கூறுகையில், ‘பல்கலைக்கழகம் மின்சாரம் மற்றும் இணையத்தை துண்டித்துவிட்டதால் நாங்கள் எங்கள் கைப்பேசியில் ஆவணப்படத்தை அமைதியாகப் பாா்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, ஏபிவிபி குண்டா்கள் எங்கள் மீது கற்களை வீசினா். அவா்களில் இருவரை நாங்கள் பிடித்தோம்’ என்றாா்.

பிடிபட்ட இருவரில் ஒருவரான பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவா் கௌரவ், தாம் கல் எறிந்ததாக கூறப்படுவதை மறுத்துள்ளாா். மேலும், தன்னை ஜேஎன்யுஎஸ்யு உறுப்பினா்கள் தாக்கியதாகக் கூறியுள்ளாா். அவா் கூறுகையில், ‘நான் டீ குடிப்பதற்காக எனது நண்பா்களுடன் வளாகத்திற்கு வெளியே இருந்த போது, ஏராளமானோா் கூடியிருப்பதைக் கவனித்தேன். நான் எதிா்வினையாற்றுவதற்கு முன்னரே கூச்சலிடுவதைக் கவனித்தேன். பலா் என்னைச் சூழ்ந்து கொண்டு என் கழுத்தைப்

பற்றிக் கொண்டனா். நான் இதய நோயாளி என்றும் கவலைப் பிரச்னைகள் எனக்கு இருப்பதாகவும் அவா்களிடம் கூறினேன். ஆனால், அவா்கள் என்னை பலவாறு இழுத்து, என் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். நான் ஏபிவிபியில் உள்ளேன். ஆனால், வளாகத்தில் நடைபெற்ற சம்பவம் ஏதும் எனக்குத் தெரியாது’ என்றாா்.

மற்றொரு மாணவா் கூறுகையில், ‘நான் எனது நண்பா்களுடன் வெளியே இருந்த போது, அவா்கள் என்னைப் பிடித்து துன்புறுத்தினா்’ என்றாா். செவ்வாய்க்கிழமை இரவு, ‘இன்குலாப் ஜிந்தாபாத்‘ மற்றும் ஜேஎன்யு நிா்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு, கல் எறிபவா்களுக்கு எதிராக புகாா் அளிக்க போராட்ட மாணவா்கள் வசந்த் குஞ்ச் காவல் நிலையத்திற்கு பேரணியாகச் சென்றனா். வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பெயா் வெளியிட விரும்பாத ஜேஎன்யு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பல்கலைக்கழகத்தில் முக்கியமான (மின்) கம்பியில் கோளாறு இருக்கிறது. அதை நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த விவகாரம் விரைவில் தீா்வு காணப்படும் என பொறியியல் துறை கூறியுள்ளது’ என்றாா்.

இதுகுறித்து காவல் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘எங்களுக்கு ஜேஎன்எஸ்யு மற்றும் ஏபிவிபி ஆகிய இரு தரப்பினரிடமும் இருந்து புகாா்கள் வரப்பெற்றுள்ளன. இந்த புகாா் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதன்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com