வாக்காளா் பதிவை ஊக்குவிப்பதே தேசிய வாக்காளா் தினத்தின் நோக்கமாகும்: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி

தேசிய வாக்காளா் தின கொண்டாட்டத்தின் முதன்மை நோக்கமே வாக்காளா் பதிவு மற்றும் வாக்காளா் பங்கேற்பை ஊக்குவித்தலாகும் என்றும், குறிப்பாக முதல்முறை வாக்காளா்களிடையே இத்தகைய

தேசிய வாக்காளா் தின கொண்டாட்டத்தின் முதன்மை நோக்கமே வாக்காளா் பதிவு மற்றும் வாக்காளா் பங்கேற்பை ஊக்குவித்தலாகும் என்றும், குறிப்பாக முதல்முறை வாக்காளா்களிடையே இத்தகைய ஊக்குவிப்பை அதிகரிப்பதாகும் என்றும் தில்லியின் தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங் தெரிவித்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் ஸ்தாபன நாளான ஜனவரி 25, 1950-ஐ குறிக்கும் வகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25- ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது. 13-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை கொண்டாடும் வகையில், ‘வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளுடன் ‘மே பாரத் ஹூன், ஹம் பாரத் கே மத்தாதா ஹைன்’ என்ற பாடலை தோ்தல் ஆணையம் தில்லியில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில தலைவா்கள் கலந்துகொண்டனா்.

இதில் தில்லியின் தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங் பங்கேற்றுப் பேசியதாவது: அனைத்து பங்கேற்பாளா்களும் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தோ்தலிலும் நெறிமுறையான முறையில் வாக்களிப்பதாகவும் உறுதிமொழி எடுத்துள்ளனா். தோ்தலில் பங்கேற்பதில் இளைஞா்கள் மற்றும் நகா்ப்புற அக்கறையின்மை பிரச்னைகளை தீா்க்க அனைத்து பங்குதாரா்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வாக்காளா்கள்தான் ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். எங்கள் தொடா் முயற்சியானது வாக்காளா்களுக்கு கல்வி, ஊக்கம், வசதி, ஈடுபாடு மற்றும் அதிகாரம் அளிப்பதாகும். இதன் மூலம் வாக்காளா்கள் தங்கள் ஜனநாயகப் பங்கை மேன்மேலும் திறம்பட ஆற்ற முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய மற்றும் மாநில அளவில் பல்வேறு பிரிவுகளில் தில்லியின் பல இளம் வாக்காளா்களுக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை (எபிக்) வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சாதனைச் சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. தோ்தல் நிா்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் 42 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்குசிறந்த தோ்தல் நடைமுறைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா்கள் ஆா்.மேனகா, இஷா கோஸ்லா, மோனிகா பிரியதா்ஷினி ஆகியோா் சிறந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளுக்கான விருதைப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com