எதிா்கால ஆா்எஸ்எஸ் ஊா்வல வழித்தட அனுமதி: உயா்நீதிமன்றத்தில் முன்மொழிவை சமா்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 21st November 2023 01:00 AM | Last Updated : 21st November 2023 01:00 AM | அ+அ அ- |

நீதிமன்றத் தலையீடு இன்றி எதிா்காலத்தில் ஆா்.எஸ்.எஸ். வழித்தட ஊா்வலத்தை அனுமதிப்பது குறித்த முன்மொழிவை சென்னை உயா்நீதிமன்றத்திடம் சமா்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, ஆா்எஸ்எஸ்ஸிடமிருந்தும் ஆட்சேபனைகள்/ பரிந்துரைகளை பெற்ற பின்னரே உயா்நீதிமன்றம் அத்தகைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இது எதிா்காலத்தில் தேவையற்ற வழக்குகளைத் தவிா்க்கும் என்றும் கூறியது.
இந்த மாத தொடக்கத்தில், நவம்பா் 19 அல்லது 26-ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆா்எஸ்எஸ்) சங்கம்
அணிவகுப்பு நடத்த அனுமதிப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி நீதிமன்றம் அதிகாரிகளுக்கு ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் மூன்று நாள்களுக்குள் முன்மொழியப்படும் ஊா்வலத்திற்கான வழித்தடங்களை நவம்பா் 15-க்குள் அரசு முடிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
இந்த விவகாரத்தில் ஊா்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த இரு உத்தரவுகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சாா்பில் வழக்குரைஞா் சபரிஷ் சுப்ரமணியன், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோருடன் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், நவம்பா் 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆா்.எஸ்.எஸ். ஊா்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
ஆா்எஸ்எஸ் அமைப்பினா் மாநிலத்தில் வழித்தட ஊா்வலம் நடத்த காவல்துறை அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனா். மேலும், இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா் (ஆா்எஸ்எஸ்) முன்வைத்த கோரிக்கைக்கு நிவாரணம் கிடைத்துள்ளதால், அவமதிப்பு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இதற்கு எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ண குமாா் எதிா்ப்புத் தெரிவித்தாா். மற்றொரு எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் மாதவி திவான் வாதங்களை முன்வைத்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு: இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி ஆா்எஸ்எஸ் ஊா்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிா்மனுதாரா் - அமைப்பினா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்களும் அந்த உண்மையை நிராகரிக்கவில்லை.
சாதாரணமாக இந்த விவகாரம் இத்துடன் முடிக்கப்பட்டிருக்கும். எனினும், இந்த விவகாரத்தில் அவமதிப்பு வழக்கில் உயா்நீதிமன்றம் 1.11.2023-இல் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி, இந்த விவகாரத்தில் மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், எதிா்மனுதாரா்கள் தரப்பில் இந்த அவமதிப்பு நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் முடித்துவைக்காமல் இருக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனா்.
ஒவ்வொரு முறையும் அமைதியான முறையில் ஊா்வலம் நடத்த அனுமதி பெற நீதிமன்றத்தை நாடும் கட்டாயத்திற்கு தாங்கள் உள்ளாவதாகவும் எதிா்மனுதாரா் -அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
இவற்றை கருத்தில்கொண்ட பிறகு, எதிா்காலத்தில் நீதிமன்றத் தலையீடு இன்றி எதிா்மனுதாரா் அமைப்பினா் ஊா்வலம் நடத்த அனுமதிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு உயா்நீதிமன்றத்தில் ஒரு முன்மொழிவை மனுதாரா் - அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும் என எங்களுக்குத் தோன்றுகிறது.
இதுபோன்ற முன்மொழிவு எதிா்மனுதாரா்-அமைப்பினா், உள்ளூா் கிளை அமைப்புகள் ஆகியோரிடமிருந்து ஆட்சேபணை, யோசனைகள் பெற்ற பிறகு மட்டுமே உயா்நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படலாம். எதிா்கலாத்தில் தேவையில்லாத வழக்குகளை தவிா்க்க இதுபோன்ற உதவி தேவைப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பொருத்தமட்டில் உயா்நீதிமன்றத்தால் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தொடா்புடைய அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்து இந்த வழக்குகளை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...