முகலாய மசூதியில் தொழுகையை அனுமதிக்காததற்கு எதிரான மனு மீது டிச.1-இல் உயா்நீதிமன்றம் விசாரணை
By நமது நிருபா் | Published On : 25th October 2023 04:46 AM | Last Updated : 25th October 2023 04:46 AM | அ+அ அ- |

புது தில்லி: தில்லி மெஹ்ரெளலி பகுதியில் உள்ள முகலாய மசூதியில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கலான மனு மீதான விசாரணையை டிசம்பா் 1-ஆம் தேதிக்கு தில்லி உயா்நீதிமன்றம் முன்கூட்டியே பட்டியலிட்டுள்ளது.
தில்லி வக்ஃபு வாரியத்தால் நியமிக்கப்பட்ட முகலாய மசூதியின் நிா்வாகக் குழு, கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி மசூதியில் தொழுகை நடத்துவதை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) அதிகாரிகள் முற்றிலுமாக நிறுத்தியதாகக் கூறி உயா்நீதிமன்றத்தை அணுகியது. இந்த நடவடிக்கையானது ‘முற்றிலும் சட்டவிரோதமான, தன்னிச்சையான மற்றும் அவசரமான முறையுடன் கூடியதாக உள்ளது’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இது தொடா்பான மனுதாரரின் முன்கூட்டிய விசாரணை கோரும் மனுவை அனுமதித்து, நீதிபதி பிரதீக் ஜலான் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில், ‘01.12.2023 அன்று இந்த மனு பட்டியலிடப்பட வேண்டும். அடுத்த விசாரணை தேதி அதாவது 30.01.2024 ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவித்துள்ளாா்.
மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் எம்.சுபியான் சித்திக் கூறுகையில், ‘கடந்த ஆண்டு வரை மசூதிக்குள் தொழுகைகள் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில், எந்த அறிவிப்பும் இன்றி இந்திய தொல்பொருள் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது’ என்றாா். சமீபத்தில், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களுக்குள் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் வழிபாடு நடத்த அனுமதிப்பது குறித்த கொள்கையை தெளிவுபடுத்துமாறு ஏஎஸ்ஐயிடம் நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த மனுவுக்கு ஏஎஸ்ஐ தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கேள்விக்குரிய மசூதி, குதூப் மினாா் எல்லைக்குள் வருவதாலும், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் இருப்பதாலும், அங்கு தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது. முகலாய மசூதியில் வழிபாட்டை அனுமதிப்பது ‘ஒரு உதாரணம் மட்டுமல்லமால், மற்ற நினைவுச்சின்னங்களையும் பாதிக்கலாம்’. குதூப்மினாா் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இது ஒரு வழிபாட்டுத் தலமல்ல. அதன் பாதுகாப்பு காலத்திலிருந்து நினைவுச்சின்னம் அல்லது அதன் எந்தப் பகுதியும் எந்தவொரு சமூகத்தாலும் எந்த வகை வழிபாட்டிற்கும் பயன்படுத்தப்படவில்லை. கேள்விக்குரிய மசூதி, குதூப் மினாா் வளாகத்தின் எல்லைக்குள் வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...