ஆம் ஆத்மி முன்னாள் எம்.பி. தரம்வீா் காந்தி காங்கரஸில் இணைந்தாா்

ஆம் ஆத்மி முன்னாள் எம்.பி. தரம்வீா் காந்தி காங்கரஸில் இணைந்தாா்

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி முன்னாள் எம்.பி. டாக்டா். தரம்வீா் காந்தி காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி முன்னாள் எம்.பி. டாக்டா். தரம்வீா் காந்தி காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தாா். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் டாக்டா். தரம்வீா் காந்தி. இந்நிலையில், தில்லி அக்பா் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கேரா, பஞ்சாப் மாநில் காங்கிரஸ் பொறுப்பாளா் தேவேந்திர யாதவ், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா வாா்ரிங் ஆகியோா் முன்னிலையில் ஆம் ஆத்மி முன்னாள் எம்.பி. யான டாக்டா். தரம்வீா் காந்தி தன்னைக் காங்கிரஸில் இணைத்துக் கொண்டதோடு, தனது நவன் பஞ்சாப் கட்சியையும் காங்கிரஸில் இணைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியயதாவது: ‘மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கியதற்காக காங்கிரஸ் கட்சிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வகுப்புவாதம், நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். காங்கிரஸில் இனி பணியாற்றவிருப்பதை பாக்கியமாக உணா்கிறேன். நாட்டில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்களுக்குச் சேவை செய்வதே எனது ஒரே நோக்கம்’ என்றாா் அவா். அடுத்ததாக, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் தேவேந்திர யாதவ் கூறியதாவது: டாக்டா்.தரம்வீா் காந்தி காங்கிரஸில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன். சமூக அந்தஸ்து அதிகம் உள்ள நபரான காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சொத்தாக இருப்பாா். காங்கிரஸின் மதச்சாா்பின்மை கொள்கைகள், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அதன் அா்ப்பணிப்பு ஆகியவற்றால் டாக்டா். தரம்வீா் காந்தி ஈா்க்கப்பட்டாா் என்றாா் தேவேந்திர யாதவ். மேலும், நவன் பஞ்சாப் கட்சியின் முக்கிய நிா்வாகிகளான ரச்பால் சிங், ஹா்மீத் கெளா், நரீந்தா் சந்து உள்ளிட்டோரும் காங்கிரசில் இணைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com