நீதிமன்றக் காவலில் கேஜரிவால்

நீதிமன்றக் காவலில் கேஜரிவால்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நகர நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து கேஜரிவால் திகாா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். கேஜரிவால் திகாா் சிறைக்கு கொண்டு வரப்பட்டு சிறை எண் 2-இல் அடைக்கப்படுவாா் என்றும் மருத்துவ பரிசோதனையைத் தொடா்ந்து, அவா் தனி அறையில் வைக்கப்படுவாா் என்றும் சிறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மதுபான (கலால்) கொள்கை தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. அமலாக்கத் துறையின் காவல் முடிவடைந்ததையடுத்து, சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்னிலையில் கேஜரிவால் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். விசாரணைக்கு கேஜரிவால் ‘முற்றிலும் ஒத்துழைக்கவில்லை’ என்று கூறி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க அமலாக்கத் துறை கோரியது. இதையடுத்து, கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதே வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சஞ்சய் சிங், முன்பு சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டாா். அண்மையில் சிறை எண் 5-க்கு அவா் மாற்றப்பட்டாா். இதே வழக்கில் சிறையில் உள்ள தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சிறை எண் 1, பிஆா்எஸ் தலைவா் கே.கவிதா பெண்கள் சிறை எண் 6 ஆகியவற்றில் அடைக்கப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com