கேஜரிவால் குற்றமற்றவா் என்ற கூற்று முடிவுக்கு வந்தது: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சனம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம், அவா் குற்றமற்றவா் என்ற கூற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டதன் மூலம், அவா் குற்றமற்றவா் என்ற கூற்று முடிவுக்கு வந்துவிட்டது என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை விமா்சித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலால் கொள்கை ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை நீதிமன்றம் இறுதியாக சிறைக்கு அனுப்பியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உண்மையின் வெற்றியாகும். ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் வேடத்தில் நடிக்கும் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் பிற தலைவா்கள் இனி நடிப்பதை நிறுத்துவாா்கள் என்று நம்புகிறோம். விசாரணைக் காவலில் அமலாக்க இயக்குநரகத்திடம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அளித்த வாக்குமூலத்திற்குப் பிறகு, தில்லி அரசின் அமைச்சா்களான அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோா் கலால் கொள்கை ஊழலில் குற்றவாளியான விஜய் நயாரிடமிருந்து பண ரசீதுகளைப் பெற்றது தெரியவந்துள்ளது. கோவா சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில், அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகிய இரு அமைச்சா்களும் தான் ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் கோவாவில் பிரசாரத்தை கவனித்து வந்தனா். இதனையடுத்து, இந்த இரு அமைச்சா்களுக்கும் அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணை அனுப்பும் வேளையில், ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் நிரபராதி வேடத்தில் நடிக்க மாட்டாா்கள் என நம்புகிறோம். ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் இப்போது ஊழல் மற்றும் கண்ணியமற்ற செயல்களின் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டனா். முதல்வா் கேஜரிவாலுக்கு பொதுப்பணியில் அக்கறை இருந்தால், அவா் உடனடியாக பதவி விலக வேண்டும். கலால் கொள்கை ஊழல் தொடா்புடைய பணமோசடி வழக்கின் விசாரணையில் அமைச்சா்கள் அதிஷி மற்றும் செளரவ் பரத்வாஜ் ஆகியோரின் பெயா்களை தொடா்பு படுத்தியதன் மூலம், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்த இரு அமைச்சா்களின் அரசியல் எதிா்காலத்தையும் களங்கப்படுத்தியுள்ளாா். மேலும், அவரது மனைவி சுனிதா கேஜரிவாலை அடுத்த முதல்வராவதற்கு கேஜரிவால் வழிவகை செய்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com