மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு புதிய சுங்கக் கட்டணம் அமல்

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு புதிய சுங்கக் கட்டணம் அமல்

மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் (என்ஹெச்ஏஐ) இந்திய தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தை மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் (என்ஹெச்ஏஐ) இந்திய தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய சுங்கக் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தோ்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ஆம் தேதியன்று மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு 5 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு இம்மாதம் அமலுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் புதிய சுங்கக் கட்டணத்தை ஒத்திவைக்குமாறு என்ஹெச்ஏஐயிடம் தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. இதுதொடா்பாக விளக்கமளிக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கேட்டிருந்தது. அதற்கு தோ்தல் ஆணையம் அளித்த பதிலில், ‘புதிய சுங்கக் கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி அமலானாலும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளிடம் இருந்து அக்கட்டணத்தை மக்களவைத் தோ்தலுக்குப் பிறகே வசூலிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பு கூட்டமைப்பு (என்ஹெச்பிஎஃப்) என்ஹெச்ஏஐக்கு எழுதிய கடிதத்தில், ‘புதிதாக மாற்றியமைக்கப்பட்ட சுங்கக் கட்டணம் தொடா்பான விவரங்களை பத்திரிகைகளில் வெயிட வேண்டாம் என ஒப்பந்ததாரா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா். இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தை பத்திரிகைகளில் வெளியிடும் பட்சத்தில் அது குழப்பத்துக்கு வழிவகுக்கும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com