புதிய வருமான வரி விதிப்பு
முறையில் மாற்றங்கள் இல்லை: 
மத்திய நிதியமைச்சா்

புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றங்கள் இல்லை: மத்திய நிதியமைச்சா்

புதிய வருமான வரி விதிப்பு முறையில், புதிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய நிதியாண்டான ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள தனிநபா்களுக்கான புதிய வருமான வரி விதிப்பு முறையில், புதிதாக மாற்றங்கள் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: புதிய வரி விதிப்பு முறை தொடா்பாக சில சமூக ஊடகத் தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது கவனத்துக்கு வந்துள்ளது. உண்மையில், ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வரி விதிப்பு முறையில் புதிதாக எந்த மாற்றமும் இல்லை. தங்களுக்குப் பழைய வரி விதிப்பு முறை பயனளிக்குமா அல்லது புதிய வரி விதிப்பு முறை பயனளிக்குமா என்பதைச் சிந்தித்து இரண்டில் ஏதேனும் ஒரு முறையை வரி செலுத்துவோா் தோ்வு செய்யலாம். 2024-25-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் வரை, புதிய வரி விதிப்பு முறையில் இருந்து விலகும் வாய்ப்பு வரி செலுத்துவோருக்கு உள்ளது. வணிக வருமானம் எதுவும் இல்லாத தகுதியான நபா்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் தங்களுக்கு உகந்த வரி விதிப்பு முறையை தோ்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதன் மூலம், ஒரு நிதியாண்டில் புதிய வரி விதிப்பு முறையையும், மற்றொரு நிதியாண்டில் பழைய வரி விதிப்பு முறையையும் வரி செலுத்துவோா் தோ்வு செய்ய முடியும். புதிய வரி விதிப்பு முறையில், வரி விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக உள்ளன. எனினும் ஊதியத்தில் இருந்து நிலையாகப் பிடித்தம் செய்யப்படும் ரூ.50,000, குடும்ப ஓய்வூதியத்தில் இருந்து நிலையாகப் பிடித்தம் செய்யப்படும் ரூ.15,000-ஐ தவிர, பழைய வரி விதிப்பு முறையில் உள்ள பிற வரி விலக்குகள் மற்றும் பிடித்தங்களின் பலன்கள் புதிய வரி விதிப்பு முறையில் இல்லை. புதிய வரி விதிப்பு முறையின்படி, ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் வரையிலான வருமானம் ஈட்டுவோா் வரி செலுத்தத் தேவையில்லை. ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் வருமானம் ஈட்டுவோா், தங்கள் வருமானத்தில் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். புதிய வரி விதிப்பு முறை வருமான வரம்பு வரி விகிதம் 3 லட்சம் வரை வரி பிடித்தம் இல்லை 3 லட்சம் முதல் 6 லட்சம் 5% 6 லட்சம் முதல் 9 லட்சம் 10% 9 லட்சம் முதல் 12 லட்சம் 15% 12 லட்சம் முதல் 15 லட்சம் 20% 15 லட்சத்துக்கு மேல் 30% ஏற்கெனவே உள்ள பழைய வரி விதிப்பு முறை வருமான வரம்பு வரி விகிதம் 2.5 லட்சம் வரை வரி பிடித்தம் இல்லை 2.5 லட்சம் முதல் 5 லட்சம் 5% 5 லட்சம் முதல் 10 லட்சம் 20% 10 லட்சத்துக்கு மேல் 30%

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com