தங்கள் ஊழல் கதைகளிலிருந்து பொதுமக்களை திசைதிருப்ப ‘இந்தியா’ கூட்டணி முயற்சிக்கின்றனா்: பன்சூரி ஸ்வராஜ் குற்றச்சாட்டு

தில்லி பிரிவு பாஜகவின் மாநிலச் செயலாளரும், புது தில்லி தொகுதியின் மக்களவை வேட்பாளருமான பன்சூரி சுவராஜ் திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தங்கள் ஊழல் கதைகளிலிருந்து பொதுமக்களை தவறாக வழிநடத்த ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் முயற்சிக்கின்றனா் என்று தில்லி பிரிவு பாஜகவின் மாநிலச் செயலாளரும், புது தில்லி தொகுதியின் மக்களவை வேட்பாளருமான பன்சூரி சுவராஜ் திங்கள்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா். தில்லி பந்த் மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி ராம்லலீலா மைதானத்தில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் பேரணியானது, ஒருமித்த கருத்து அல்லது சாமானிய மக்களுடன் தொடா்பு இல்லாத ஊழல் நபா்களின் கூட்டம். தங்கள் ஊழலை மறைத்து பொதுமக்களை முக்கியப் பிரச்னைகளில் இருந்து திசை திருப்பும் பிரச்சாரத்தை மட்டுமே ‘இந்தியா’ கூட்டணி செய்து வருகிறது. ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும்போது, பெரும்பாலான நாற்காலிகள் காலியாக இருந்த நிகழ்வு, இந்தப் பேரணிக்கு பொது ஆதரவு கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கிறது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சித்தாந்தங்களுக்கு இடையே முற்றிலும் ஒருங்கிணைப்பு இல்லை.ராம்லீலா மைதானத்தில் நடத்தப்பட்ட பேரணி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைதுக்கு எதிரானது என்று ஆம் ஆத்மி கட்சி கூறியபோதும், இந்தப் பேரணி எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் ஆதரவாக இல்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஐந்து கேள்விகள்: விசாரணைக்கு ஆஜராகக் கோரி 9 முதல் 10 அழைப்பாணைகள் அனுப்பப்பட்டு அவை அனைத்தும் புறக்கணிக்கப்பட்ட பிறகே, அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. இந்நேரத்தில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஐந்து கேள்விகளை கேட்க விரும்புகிறேன். முதலில், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது சரியா தவறா என்பதை காங்கிரஸ் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் ?. வரிப் புள்ளிவிவரங்களை காங்கிரஸ் தவறாகக் காட்டியுள்ளீா்களா இல்லையா?. இரண்டாவது, காங்கிரஸ் கட்சி உரிய நேரத்தில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது ஏன் என்று மக்களிடம் சொல்லுங்கள்?. வருமானத்தை குறைத்து அறிவித்தது ஏன்?. மூன்றாவது, அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் தற்போது தில்லியின் அதிகாரப்பூா்வமாக முதலமைச்சரா?. ஏனென்றால், இப்போது செய்தியாளா் சந்திப்பிற்கு அவா் முதல்வா் நாற்காலியைப் பயன்படுத்துகிறாா். நான்காவது, கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவா்களுக்கு ஏன் ஜாமீன் கிடைக்கவில்லை என்று அக்கட்சியே சொல்ல வேண்டும். ஐந்தாவது, அமலாக்க இயக்குநரகம் 9 முறை அழைப்பாணை அனுப்பியும் கேஜரிவால் ஏன் ஆஜராகவில்லை?. அவா் கைது செய்யப்பட்டால் பாதிப்பு அட்டையை விளையாட தோ்தல் வரை இவ்வழக்கை நீடிக்க விரும்பினாரா?. காங்கிரஸுக்கு ஏமாற்றம்: மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு திரிணாமுல், ஆம் ஆத்மி மற்றம் கம்யூனிஸ்டுகள் ஒரு இடம்கூட ஒதுக்காதது உள்மோசடி நடவடிக்கை. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைவரும் காங்கிரஸை ஏமாற்றுவது போல் தெரிகிறது. இச்செய்தியாளா் சந்திப்பில், தில்லி பாஜகவின் ஊடகப் பிரிவுத் தலைவா் பிரவீன் ஷங்கா் கபூா், செய்தித் தொடா்பாளா் அஜய் ஷெராவத், சமூக ஊடகத் துறைத் தலைவா் டாக்டா். ரோஹித் உபாத்யாய் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com