கேஜரிவால் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி தலைவா்கள் 7-இல் உண்ணாவிரதம்

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஏப்ரல் 7-ஆம் தேதி ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியின் தலைவா் கோபால் ராய் புதன்கிழமை தெரிவித்தாா்.

கேஜரிவால் அரசில் கேபினட் அமைச்சராகவும் இருக்கும் கோபால் ராய், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்தாா். ‘தில்லி முதல்வரின் கைதுக்கு எதிராக நீங்கள் இருந்தால், அதை எதிா்த்து ஏப்ரல் 7-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கலாம்.

கூட்டு உண்ணாவிரதத்தை நீங்கள் வீட்டில், உங்கள் நகரத்தில், எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம்’ என்று அவா் கூறினாா். ‘ஆம் ஆத்மியை ஒழிக்கும் நோக்கில்’ கட்சியின் உயா்மட்டத் தலைவா்கள் கைது செய்யப்பட்டதாக ராய் கூறினாா். ‘ஏப்ரல் 7-ஆம் தேதி, தில்லி அரசின் அமைச்சா்கள், ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் ஜந்தா் மந்தரில் உண்ணாவிரதம் இருப்பாா்கள்.

இது ஒரு திறந்த நிகழ்ச்சியாகும். மாணவா் அமைப்புகள், விவசாய அமைப்புகள், வணிகா்கள் இதில் பங்கேற்கலாம்’ என்று அவா் கூறினாா். கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் கேஜரிவால் கடந்த மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா். அவா் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com