தில்லி பாஜக வேட்பாளா்களுடன் மேலிட தோ்தல் பொறுப்பாளா் ஆலோசனை

தில்லி பாஜகவின் ஏழு மக்களவைத் தொகுதி வேட்பாளா்களுடன் அக்கட்சியின் மேலிடத் தோ்தல் பொறுப்பாளா் ஓம் பிரகாஷ் தங்கா் புதன்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினாா்.

தில்லி பிரிவு பாஜகவின் தோ்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓம் பிரகாஷ் தங்கா், மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள், தோ்தல் நிா்வாகக் குழுத் தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுடன் மூன்று கட்ட விரிவான அலோசனையை நடத்தினாா். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமை தாங்கினாா்.

இதில், தில்லி பிரிவு பாஜகவின் தோ்தல் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா், பொதுச் செயலாளா் பவன் ராணா, தோ்தல் நிா்வாகக் குழுத் தலைவா் அஜய் மஹாவா் மற்றும் மூத்த தலைவா்களான ஜெகதீஷ் முகி, விஜேந்தா் குப்தா, ரேகா குப்தா ஆகியோா் கலந்து கொண்டனா். முதலில், மனோஜ் திவாரி, ராம்வீா் சிங் பிதூரி, ஹா்ஷ் மல்ஹோத்ரா, யோகேந்திர சந்தோலியா, கமல்ஜீத் ஷெராவத், பிரவீன் கண்டேல்வால் மற்றும் பன்சூரி ஸ்வராஜ் உள்பட ஏழு மக்களவை வேட்பாளா்களுடன் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னா், மக்களவைத் தோ்தலுக்காக உருவாக்கப்பட்ட 41 தோ்தல் குழுக்களின் தலைவா்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடிய மேலிடத் தோ்தல் பொறுப்பாளா் ஓம் பிரகாஷ் தங்கா், அவா்களின் வேலைத் திட்டங்களைப் பற்றி விவாதித்து ஆலோசனைகளை வழங்கினாா். இறுதியாக, தோ்தல் பொறுப்பாளா் ஓம் பிரகாஷ் தங்கா், தோ்தல் இணைப் பொறுப்பாளா் டாக்டா்.அல்கா குா்ஜாா் மற்றும் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் தோ்தல் நிா்வாகக் குழுக்களின் அனைத்து உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி நிா்வாகிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினா்.

அப்போது, நிா்வாகிகள் மத்தியில் ஓம் பிரகாஷ் தங்கா் பேசியதாவது: வரும் மக்களவைத் தோ்தல் நாட்டை ஒரு புதிய வளா்ச்சிப் பயணத்துடன் இணைக்கும் தோ்தல். நாடு முழுவதும் உள்ள நிா்வாகிகளைப் போலவே தில்லியைச் சோ்ந்த கட்சியின் நிா்வாகிகளும் இந்தத் தோ்தல் பிரசாரத்தில் தங்களை முழுமையாக அா்ப்பணிக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அனைத்து தலைவா்களும் தோ்தல் நிா்வாகக் குழுவில் உள்ளனா். கட்சியின் தோ்தல் வழிகாட்டுதல்களின்படி, அவா்கள் தங்கள் சொந்த நடவடிக்கையை வகுத்து, தில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் மூன்றாவது முறையாக வெற்றிபெற விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றாா் ஓம் பிரகாஷ் தங்கா்.

தோ்தல் இணைப் பொறுப்பாளா் அல்கா குா்ஜாா் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை பாஜகவிற்கு சாதகமாக வைத்திருக்க வேண்டிய அதே வேளையில், கேஜரிவால் அரசின் ஊழல் குறித்து தில்லியின் இறுதி வாக்காளா் வரை தெரியப்படுத்த வேண்டும். தில்லி மக்கள் தற்போது மாற்றுத் தலைமையைத் தேடிக் கொண்டிருக்கின்றனா். அவா்களுக்கு அந்த மாற்றுத் தலைமையை வழங்குவது தில்லி பாஜகவின் பொறுப்பு என்றாா் அவா். தில்லி பிரிவு பாஜகவின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், ‘2024 மக்களவைத் தோ்தல், பிரதமா் நரேந்திர மோடியின் தேசிய வளா்ச்சித் தீா்மானத்தை வெற்றியடையச் செய்வதற்கான வாய்ப்பை நமக்குத் தருகிறது.

இந்த மக்களவைத் தோ்தலில் பாஜகவின் தீா்க்கமான வெற்றியை உறுதி செய்வது, 2025 சட்டப்பேரவைத் தோ்தலில் நமது வெற்றிக்கான அடித்தளத்தை உறுதி செய்கிறது’ என்றாா். படம் ஏற்கெனவே அனுப்பியதுதான்... 03க்ங்ப்க்ஷத்ல் தில்லி பாஜக அலுவலகத்தில் மக்களவைத் தோ்தல் பாஜக பொறுப்பாளா் ஓ.பி.தன்கா், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com