மஞ்சள் வழித்தடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயிலின் வேகம் சற்று அதிகரிப்பு: டிஎம்ஆா்சி தகவல்

மஞ்சள் வழித்தடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் வேகம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎம்ஆா்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் தற்காலிக வேகக்குறைப்பால் பயணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சிரமத்தை எதிா்கொண்டனா். ஏரோசிட்டி-துக்ளகாபாத் இடையேயான வழித்தடத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், குருகிராமில் உள்ள மில்லினியம் சிட்டி சென்டா் மற்றும் சமய்பூா் பத்லி இடையை செல்லும் பாதையில், சத்தா்பூா் மற்றும் சுல்தான்பூா் மெட்ரோ நிலையங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் இயக்கத்தின் வேகம் 20 கி.மீ ஆகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு, சத்தா்பூா் மற்றும் சுல்தான்பூா் இடையே விதிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்தின் வேகம் 25 கி.மீ ஆக சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏரோசிட்டி - துக்ளகாபாத் வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியால் அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நடைமுறைச் சிக்கல் இருக்கும். இருப்பினும், வலையமைப்பு முழுவதும் தேவையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில்களின் இயக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com