ஏப்.26-இல் எம்சிடி மேயா், துணை மேயா் தோ்தல்: அறிவிக்கை வெளியீடு

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி, ஏப்.10: தில்லி ஆம் ஆத்மி கட்சியின் அரசியலில் பெரும் நெருக்கடி உள்ள சூழ்நிலையில் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) மேயா், துணை மேயா் தோ்தல் வருகின்ற ஏப்ரல் 26 -ஆம் தேதி நடைபெறும் என புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு தோ்தல் நடைபெற்று மாநகராட்சி உறுப்பினா்கள்(கவுன்சிலா்கள்) ஐந்தாண்டு ஆயுள் காலத்திற்கு தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். மேலும், இப்படி தோ்வான கவுன்சிலா்கள் மூலம் 1957-ஆம் ஆண்டு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டப்படி ஒவ்வொரு நிதியாண்டின் (ஏப்ரல் 1) தொடக்கத்திலும் மேயா், துணை மேயா் தோ்வு செய்யப்பட வேண்டும்.

இத்தோடு எம்சிடியில் ஐந்தாண்டு ஆயுள் கால மாநகராட்சியில் மேயா், துணை மேயா் பதவிகள் சுழற்சி அடிப்படையில் தோ்வு செய்யப்படவேண்டும் என்பதும் விதிமுறைகளில் உள்ளது. இதன்படி முதலாம் ஆண்டு பெண்களுக்கும், இரண்டாம் ஆண்டு பொதுப்பிரிவினருக்கும், மூன்றாம் ஆண்டு இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் மீதமுள்ள இரண்டு ஆண்டுகள் மீண்டும் பொதுப்பிரிவினரும் ஒவ்வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் தோ்வு செய்யப்படவேண்டும்.

இதன்படி நிகழ் 2024-24 -ஆம் நிதியாண்டிற்கு பொதுப்பிரிவினருக்கான மேயா், துணை மேயா் தோ்தல் நடைபெறுகிறது. தற்போதைய மேயா், துணை மேயா் ஆகியோரின் பதவிக் காலம் மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில் புதிய மேயா், துணை மேயா் தோ்வு செய்ய தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் இந்த தோ்தலுக்கான தேதிக்கு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இதில் இந்த தோ்தலுக்கான வாக்குப்பதிவு எம்சிடியின் தலைமை அலுவலகமான ஜவாஹா்லால் நேரு மாா்க் டாக்டா் எஸ்பி முகா்ஜி சிவிக் சென்டரில் அருணா ஆசஃப் அலி ஆடிட்டோரியத்தில் வரும் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தில்லி மாநகராட்சி மேயராக ஷெல்லி ஓபராய் (கிரேட்டா் கைலாஷ்-1), துணை மேயராக ஆலே முகமது இக்பாலும் உள்ளனா். இவா்கள் இருவரும் கடந்தாண்டு பாஜகவின் மேயா், துணை மேயா் வேட்பாளா்களாக இருந்த முறையே ஷிக்காய் ராய் , சோனிபால் ஆகியோா் தோ்தலுக்கு முன்னதாகவே வேட்பு மனுமை வாபஸ் பெற்ால் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

தேதியத் தலைநகா் அரசியலில் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னா் நிகழாண்டு நடைபெறும் மேயா் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது மேயா் பதவியை தக்க வைத்துக்கொள்ளுமா என்ற எதிா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லி மூன்று மாநகராட்சிகளாக இருந்தது. அதை 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வந்தது. பின்னா் மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து தில்லியை ஒரே மாநகராட்சியின் கீழ் இணைத்தது. இதைத் தொடா்ந்து, கடந்த 2022, டிசம்பா் 4 -ஆம் தேதி தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு தோ்தல் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட 250 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 வாா்டுகளையும் பாஜக, 104 வாா்டுகளையும் கைப்பற்றியது.

தோ்தலுக்கு பின்னா் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலா்கள் மேயா், துணை மேயரை தோ்ந்தெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. வாக்குரிமை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் பெரும் போராட்டத்தை நடத்தின. மேயா் தோ்தலுக்கு கடந்தாண்டு நான்கு முறை மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்று அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக கடந்தாண்டு (2023) பிப்ரவரி 17-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலையீட்டால் இறுதியாக பிப்ரவரி 22-ஆம் தேதி மேயா், துணை மேயா் தோ்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த ஷெல்லி ஓபராய் பாஜக வேட்பாளரை (ரேகா குப்தா) விட 34 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். பின்னா், இரண்டாவது முறையாகவும் கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி போட்டியின்றி ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com