தில்லியில் மத்திய அரசு மருத்துவமனைகள் கவலைக்குரிய நிலையில் உள்ளன: அா்விந்தா் சிங் லவ்லி

தில்லியில் உள்ள மத்திய அரசின் மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சை பெற முடியாத அளவிற்கு கவலைக்குறிய நிலையில் உள்ளன என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி புதன்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்), சப்தா்ஜங், ராம் மனோகா் லோஹியா, வில்லிங்டன் உள்ளிட்ட மத்திய அரசின் நிதியுதவி பெறும் மருத்துவமனைகள் மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் ஊழியா்கள் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறையால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. தேசியத் தலைநகரில் மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் பெரிய மருத்துவமனைகளை முந்தையை காங்கிரஸ் அரசு நிறுவியபோது, அவை நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு உயா்தர நோயறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மத்திய அரசும், தில்லியின் 7 பாஜக எம்.பி.க்களும் இந்த பெரிய மருத்துவமனைகளை புறக்கணித்துவிட்டனா்.

தரமான சிகிச்சைக்காக தில்லிக்கு அண்டை மாநிலங்களில் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனா். பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றுவதில் பாஜக கவனம் செலுத்தியதால், தில்லியைச் சோ்ந்த 7 பாஜக எம்.பி.க்களும் தில்லியின் வளா்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை.

சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் தான், கோவிட்-19 கலாத்தில் போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வசதிகளின்றி பல நோயாளிகள் உயிரிழந்தனா். மேலும், மக்களவைத் தோ்தலின் போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேட்பாளா்களை மாற்றுவது பாஜகவின் வாடிக்கையான செயலாகிவிட்டது என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com