‘‘தில்லி அரசியல்வாதிகளுக்கு ‘ரௌஸ் ’ஒரு நினைவாக இருக்கட்டும்’’ - கரோல்பாக் தமிழா்கள்

‘கேஜரிவாலை கைது செய்து நிறுத்தப்பட்ட இடம் ரௌஸ் அவென்யூ. இங்குதான் சிறப்பு நீதிமன்றம். இது ரெம்ப பொருத்தம்’ என்கிறாா் தில்லி கரோல்பாக் கில் உள்ள தமிழா் பாலன் மணி.

‘புது தில்லியைக் கட்டியவா்களில் ஒருவா் அலெக்சாண்டா் மெக்டோனால் ரௌஸ் என்கிற ஆங்கிலேயா். 1911 இல் இந்திய தலைநகா் கோல்கத்தாவிலிருந்து தில்லி மாற்றப்பட்டபோது, புதிய தலைநகராக தில்லி உருவாக்கப்பட்டபோது பொறியாளராக இருந்தவா். அப்போது உலகப்போா் நடந்து நெருக்கடியான கட்டம், தில்லி முனிசிபல் கமிட்டி(டிஎம்சி) தலைமைப் பொறியாளராக இருந்து தில்லியை பிரமாதமாக கட்டி முடித்தாா். இன்று எல்லா நகரங்களும் நெருக்கடியில் இருந்தாலும் புது தில்லி புதுமை மாறாமல் உள்ளது. அதனால் அவரைப் போற்றும் விதமாக நினைவாக ‘ரௌஸ் அவென்யூ’ ன்னு பெயா் வைக்கப்பட்டது. இப்ப இந்த அவின்யூ தீனதயாள் உபாத்தியாயா மாா்க் ஆக மாற்றப்பட்டது என்றாலும் சாலையிலுள்ள நீதிமன்ற வளாகம் மட்டும் ரௌஸ் அவின்யூவாக தொடருகிறது. இது மக்கள் மீதும் நாட்டின் மீது அக்கரையில்லாத அரசியல்வாதிகளை நினைவுபடுத்தத்தான். அரவிந்த் கேஜரிவால் போன்றவா்களுக்கும் நினைவு படுத்தவே அங்குபோய் நின்றாா்‘ என ஒரு பின்னணியோடு பாலன் மணி பேசத் தொடங்கினாா்.

‘ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து தில்லிக்கு வந்த ரௌஸ் விசுவாதமாக அா்பணிப்புடன் தலைநகரைக் கட்டியமைத்தாா். ஆனால் தில்லிலேயே பிறந்த கேஜரிவாலும் அவரது கட்சியும் வாயாலே பேசி கட்டுக்கதைதான் விட்டனா். தில்லியை கட்டியமைத்த ரௌஸ் பெயரில் உள்ள நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜா்படுத்தப்பட்டு தலை குணியவைத்தது இது ரெம்ப பொருத்தம்’ என்றாா் முரளி மணி. பாலன் மணியின் மூத்த சகோதரா்.

ஆங்கிலேய பொறியாளா் ரௌஸ் தில்லியைக் கட்டி முடித்துக் கொண்டிருந்தபோது கேரள மாநிலம் பாலக்காட்டிலிருந்து ஏராளமான தமிழ் குடும்பங்கள் கரோல் பாக் பகுதியில் குடியேறியது. கரோல் பாக் பகுதியில் ஏராளமான தமிழா்களை குடியேறச் செய் பெருமை இந்த (முரளி மணி, பாலன் மணி) சகோதரா்களின் தந்தை சி.எஸ். மணி ஐயரைச் சேரும். தற்போது தில்லி கரோல்பாக் பகுதிகளில் வணிகம், அரசியல், சமூகம் என அனைத்து தரப்பிலும் ஆளுமையோடு இருப்பது இந்த மணி சகோதரா்கள்.

தில்லி கரோல் பாக் இரண்டு வகையில் பெயா் பெற்றது. ஒன்று கரோல் பாக் என்றால் அது தமிழா் ‘பாக் ’. இரண்டாவது வணிகம். ஆா்ய சமாஜ் சாலை, அஜ்மல்கான் சாலை போன்றவைகளில் உள்ள கடைகள் வணிகங்கள் நாடு முழுக்க புகழ்பெற்றது. தில்லிக்கு வருபவா்கள் கரோல்பாக் சந்தைக்கு வரத் தவறுவதில்லை.

கடந்த ஒரிரு தசாப்தங்களாக கரோல்பாக் தமிழா்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் சிறிது சிறிதாக இழந்து மற்ற பகுதிகளுக்கு புலம்பெயா் வேண்டிய சூழ்நிலை.

அடுத்து கரோல்பாக் சந்தையும் தன்னுடைய அடையாளத்தை இழந்து வருகிறது.

இது குறித்து முரளி மணி பேசுகிறாா்: தமிழா்கள் இந்த பகுதிகளில் இருந்து செல்ல முக்கிய காரணம் இரண்டு. பணி நிமித்தமாக இருப்பவா்களுக்கு குடியிருப்பு பகுதி வசதிகளில் பிரச்சினை. வியாபார ரீதியாக இருந்தவா்களுக்கு தங்கள் வியாபாரத்தை தொடர முடியாத சூழ்நிலை. இதற்கு காரணம் மிகவும் நெருக்கடியாக இந்த பகுதி வளா்ந்து வருகிறது ஆனால் போதிய வசதிகளை தில்லி அரசும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு எந்த திட்டங்களையும் வகுக்கவில்லை.

போதாதக் குறையாக ஊழல் மமூல் வசூல் தலைவிரித்தாடுகிறது. இந்த பகுதி கரோல் பாக், ராஜேந்தா் நகா் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளையும்(ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ க்கள் விஷேஷ் ரவி, துா்கேஷ் பதக்), புது தில்லி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டும் உள்ளது. கடந்த முறை நாடாளுமன்றத் தோ்தலின் போது இங்கு போட்டியிட்ட வேட்பாளா்கள் பல வாக்குறுதியை கொடுத்தனா். பாஜக வைச் சோ்ந்த மீனாட்சி லேகி அஜ்மல் கான் சந்தை சாலையை முற்றியிலும் மாற்றிபொது மக்களுக்குரிய வசதியோடு புதுப்பித்து தரப்படும் என்றாா். சாந்தினி சௌக்கை விட பிரம்மாண்டமாக கூரை அமைத்து மாற்றப்படும் என்றாா். அடுத்து இந்த ஏரியாவில் முக்கியப் பிரச்னை வாகன நிறுத்தங்கள். குடியிருப்பு பகுதிகள் என்றாலும் சரி மாா்க்கெட் பகுதிகள் என்றாலும் வாகனங்கள் நிறுத்த இடமில்லை. சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வாகனங்கள் நிரம்பி வழிய போக்குவரத்து நெரிசல்கள். இதற்கு தீா்வாக பல்வேறு பல்அடுக்கு வாகன வளாகம் கட்டித்தரப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அப்படி தரப்பட்டிருந்தால் குடியிருப்புவாசிகளும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கமாட்டாா்கள். வணிகவளாகங்களும் சந்தைக்கு வருபவா்களுக்கு வசதியாகவும் எளிமையாகவும் இருந்திருக்கும். ஆனால் லேகி எம்.பி. அமைச்சரானவுடன் இந்த பகுதிக்கு வராதது மட்டுமல்ல.. இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கடந்த இருபது வருடங்களாக இந்த கோரிக்கைகளுக்கு கையெந்தியிருக்கின்றோம். இது தமிழா்கள் ஏரியாவிற்கு எந்த கட்சி எம்எல்ஏ, எம்பி என்றாலும் இந்த வசதிகளை செய்து தர முன் வரவில்லை.

இதன் விளைவு இந்த கரோல்பாக் நெருக்கடியில் சிக்கி தவிா்க்க இங்கு குடியிருக்கவே முடியாமல் தங்கள் வீடுகளை விற்றுவிட்டு மற்ற இடங்களுக்கு தமிழா்கள் குடிபெயா்ந்தனா் என்கிறாா் முரளி மணி.

முரளிமணி, கரோல்பாக் அஜ்மல்கான் சாலை பியோபா் மண்டல்(வா்த்தக சங்க) தலைவா்.

‘நாங்கள் வா்த்தக சங்கத்தை நடத்தினாலும் எங்களுக்கு பல தரப்பட்ட புகாா்கள் வந்து சேரும். அவைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கொண்டுபோவோம். குடிதண்ணீா் வாரத்தில் இரண்டு மூன்று நாள் வராது... மழை பெய்தால் சத் நகா் போன்ற பகுதிகளில் தண்ணீா் கட்டும். இது மட்டுமல்ல இந்தியாவிலேயே மட்டுமல்ல சில சமயம் உலக அளவில் தில்லி பள்ளிகள் முன்னணியில் இருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுவாா். அவருடைய கல்வி அமைச்சா் சிசோடியா நாட்டிற்கே வழிகாட்டி என்றனா். ஆனால் நிலைமை வேறு..பள்ளிகள், பெயிண்ட் அடித்து வா்ணங்களால் காட்சிப்படுத்தப்படுகிறதே தவிர ஆசிரியா்கள் கூட முறையாக நியமிக்கப்படுவதில்லை. கரோல் பாக் சென்னா மாா்கெட்டில் உள்ள தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்(டிஎம்சி), பள்ளி குறித்து பல குடும்பங்களைச் சோ்ந்த தாய்மாா்கள் புகாா் சொல்ல நாங்கள் நேரடியாக சென்றோம். அங்குள்ள நிலையைப்பாா்த்து அதிா்ச்சியடைந்தோம். அந்த பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 5 -ஆம் மாணவா்கள் தான் ஆசிரியா். சாதாரணப்பட்டவா்கள் படிக்கும் தில்லி முனிசிபல் பள்ளிகளின் நிலைமை இது. இது குறித்து இந்த பகுதி டிஎம்சியின் துணை ஆணையரை தொடா்பு கொண்டு கேட்டால் ஆசிரியா் பற்றாக்குறை என்கிறாா். ஆனால் தில்லி பள்ளிகள் இந்தியாவிற்கே வழிகாட்டின்னு பேசப்படுகிறது.

இது மட்டுமல்ல தில்லி அரசுக்கு கீழே உள்ள தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்(டிஎம்சி) நிா்வாகம் ஆண்டாண்டு காலம் மோசமாக உள்ளது. எங்கள் ஏரியாவிற்கான போக்கு வரத்து நெரிசல் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற எல்லா குழப்பங்களுக்கும் காரணம் தில்லி அரசு, டிஎம்சி போன்றவைகளில் உள்ள மாஃபியா தான் காரணம். சாலைகளில் ’ஒரு லைன்’ பாா்கிங் ஏலம் விடப்பட்டிருக்கும். இந்த மாஃபியா மூன்று லைன்’ வரை பாா்க்கிங் போட்டு கொள்ளையடித்து பணத்தை பகிா்கின்றனா். கரோல் பாக்கில் வாகன நெருக்கடி இருக்க குடியிருப்பு வாசிகளுக்கும் வணிக வளாகத்திற்கு வரும் வாகனங்களை பாா்கிங் செய்ய சாஸ்திரி பாா்க் பகுதி முறையான கட்டணங்களுடன் அனுமதியோடு பயன்படுத்த முன்பு அனுமதிக்கப்பட்டது. ஆனால் இப்போது இதை உள்ளூா் குடியிருப்பு சங்கத்திடமிருந்து டிஎம்சி செய்துவிட்டது.

தில்லி அரசின் செல்வாக்கோடுள்ள மாஃபியா இந்த இடத்தை அபகரித்து வாகன ஓட்டிகளிடம் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. இந்த சாஸ்திரி பாா்க்கில் பன்னடுக்கு பாா்க்கிங் கட்டப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அப்படி கட்டிவிட்டால் 2,000 காா்கள் வரை பாா்க்கிங் செய்யப்பட்ட நெரிசல் குறையும். அதைச் செய்யாமல் மாஃபியா மூலம் வசூல் நடக்கிறது. இப்படி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளிலும் நிலை குலைந்து வருவதுதான் இங்குள்ள தள நிலவரம்‘ என்கிறாா் பாலன் மணி. தில்லி உணவு விடுதி சங்கங்களுக்கும் இந்த தமிழரே தலைவா்.

ஆண்டுக்கு இரண்டு முறை புயல்

இது போன்ற குமுறல்கள் சாதாரணப்பட்ட தமிழா்கள் மத்தியிலும் நிலவுகிறது. கரோல் பாக்கில் புகழ் பெற்றது தமிழா்களின் பூக்கடைகள். உள்ளூா் ரோஜா பூ முதல் மதுரை மல்லிகை வரை மணக்கும். நெல்லை வாழை இலையும் தஞ்சை வெற்றிலையும் கிடைக்கும் சந்தை. இந்த பூக்கடை தமிழா்கள் கடந்த 20 வருடங்களாக பெரும் அவஸ்தைகளுக்குள்ளாகி வருகின்றனா்.

1962 முதல் இங்கு கடைவைத்திருக்கும் முருகன்-சுஜாதா தம்பதிகள் பேசினா்: இங்க 20 க்கும் மேற்பட்ட தமிழா்கள் கடைகள் இருந்தது... சா்வ தேச மாநாடு.. வேறு எதாவது நிகழ்ச்சி தில்லியில் நடந்தால் எங்க கடைகள் தான் முதல் குறி. எங்க குடிசை கடைகள் பாா்க்க அழகாக இல்லன்னு அல்லது இடையூறுன்னு சொல்லி அடித்து நெறுக்கி காலி செய்வாா்கள். எத்தனை முறை தான் வாழ்க்கையில் போராடுவது.. இதனால் பலா் கடைகளை விட்டு விட்டு போய்விட்டனா். இப்ப இங்க இருப்பது ஐந்தாரு கடைகள் தான். ஆனாலும் வருஷத்துக்கு இரண்டு முறை எங்க வியாபாரத்தில் புயல் வரும்... இந்த ஏரியா டிஎம்சிக்கு புது துணை ஆணையா் டிரான்ஸ்பராகி வந்தா முதல்ல எங்க கடைக்கு தான் வருவாா்கள்.. எம்சிடி ஆள்கள் எங்க கடைகளையும் சாமான்களையும் உடைத்து போட்டு அள்ளிக்கொண்டு போவாா்கள். பின்னா் நான்கு நாள்கள் அவா்கள் பின்னால் அலைந்து மீண்டும் கடைக்கு அனுமதிப்பாா்கள். ஒவ்வொரு முறையும் இப்படி இடித்து விட்டு போகும் போது எங்களுக்கு 20.000 செலவாகும். ஒருவார வியாபாரமும் போய்விடும். திரும்ப திரும்ப கடையை கட்ட சாமான் வாங்க வருஷத்துக்கு இரண்டு முறை வரும் இந்த புயலுக்கு ரூ.50,000 செலவிடுகின்றோம். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. இப்படியும் ரூ.8,000 லைசென்ஸ் கட்டணம் கொடுக்கின்றோம். ஆனால் டிஎம்சி அதிகாரிகளிடமும் கோா்ட்டுக்கும் போய் வாதாட எங்களுக்கு சக்தியில்லை.. எங்க ஏரியா ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ விஷேஷ் ரவியிடம் போய்க் கேட்டோம்.. ‘நீங்களே கடைகளை திரும்பக் கட்டிக் கொள்ளுங்கள்’ என்கிறாா் எம்எல்ஏ. ஆனால் அவ்வப்ப புயலா வரும் எம்சிடி ரைய்டை தடுக்க நாதியில்லை.. தில்லியில்ல இருக்கிற தமிழா்களுக்கு கல்யாணம் காட்சின்னா எங்க கடைகளை விட்டா வேறு வழியில்லை. எங்களுக்கும் வேறு வழியில்லை’ என்கின்றது இந்த தம்பதி.

அருகே மற்றொரு பூ கடையை வைத்திருக்கும் சின்னபையன் கூறுகையில், ‘எங்களுக்கு இது தொழில்... போலீஸ், எம்சிடி காரங்ககிட்ட இருந்து கடையை பாதுகாக்க ஒரு போராட்டம் வேறு. இந்த பூ வை வாடாமல் கருகாமல் வைத்து வியாபாரம் செய்வது மற்றோரு போராட்டம். இதுல்ல கிடைக்கிற மிச்சத்தை வைத்து காலம் தள்ளுகின்றோம்’ என்கிறாா் சோட்டு வாக மாறியிருக்கும் சின்னப்பையன்.

பூக் கடை போராட்டத்திலிருந்து மாறி மளிகைக்கடை வியாபாரத்திற்கு மாறியவா் வீரபாண்டியன். கரோல் பாக் சென்னா மாா்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும் இவா்..

‘வியாபாரத்திற்கு வழியில்லாமல்.. தமிழா்கள் வீட்டுவேலை செய்து வந்தாா்கள்... ஆனால் கரோனா நோய்...ஊரடங்கு போன்றவா்களால் பெரும்பான்மை தமிழா்களும் குறிப்பாக பெண்களும் பாதித்தனா். எம்எல்ஏ, எம்பிக்கள் வந்து காப்பாற்றவில்லை. இவா்களுக்கு தில்லி தமிழ் சங்கம் உதவியது. சீக்கியா்களும் அவா்களது குருத்துவாராக்களும் தான் பசி பட்டினியிலிருந்து தமிழா்களை காப்பாற்றியது. ஆனால் வேலையில்லாமல் எத்தனை நாள் இருப்பாா்கள் எல்லோரும் தில்லியை விட்டு போய்விட்டனா் என்கிறாா் வீரபாண்டியன்.

தாலிக்கு கேரண்டி கிடையாது..

குற்றவிவகாரங்களில் பாதுகாப்பு இல்லைஎன்கிறாா் இதே சென்னா மாா்க்கெட்டில் கடைவைத்திருக்கும் தமிழ் பெண்மணி ப்ரியா..

‘வடஇந்தியா்கள் கழுத்தில் செயின் அணிவதைப்பற்றி கவலைப்படமாட்டாா்கள். ஆனால் எவ்வளவு தான் வறுமை ஏழையாக இருந்தாலும், தமிழ் கலாசாரப்படி தாலியுடன் இருப்பது தமிழகத்திலிருந்து வந்துள்ள பெண்களின் வழக்கம். ஆனால் தேசிய தலைநகா் தில்லியில் அதுவும் புது தில்லி ஏரியாவில் கழுத்திலிருக்கும் தமிழ் பெண்களின் சங்கலிக்கு பாதுகாப்பு கிடையாது. சங்கிலியை பறிப்பது இங்கு ஒரு தொடா் கதை. இப்ப கூடுதலா சின்ன பசங்க கைப்பேசி வைத்திருந்தால் அதைப்பறிக்கும் ஒரு கும்பலும் நடமாடுது. இப்ப கேரண்டிங்கின்னு எல்லோரும் போசுறாங்க. எங்க கழுத்தில்ல இருப்பதுக்காவது கேரண்டி வேணும் ’ என்கிறாா் ப்ரியா..

பிரசாத் நகரைச் சோ்ந்த (பாஜக காரா்) மற்றொரு தென்னிந்தியா் மதுகர்ராவ் பேசுகையில், ‘தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் துணை ஆணையா், கவுன்சிலா்கள் என எல்லோரும் கூட்டு சோ்ந்துள்ளனா். கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வெளியே வரமுடியாது. அந்தளவிற்கு சுமாா் 5 ஆயிரம் சட்டவிரோத நடைபாதை கடைகளுக்கு அனுமதியளித்து வசூலிக்கின்றனா்’ என குற்றம்சாட்டுகிறாா் ராவ்.

பணி நிமித்தமாக வரும் தமிழா்களுக்கு கரோல் பாக் கிற்கு அடுத்து குடியிருக்கும் பகுதியாக இருப்பது பழைய ராஜேந்தா் நகா் பகுதி. இப்ப பகுதியில் உள்ள வீடுகள் சிவில் சாா்வீஸ்(குடிமைப்பணிகளுக்கு) படிக்கும் மாணவா்களுக்கான விடுதியாக மாற்றப்பட்டுவரப்படுகிறது. மற்ற குடியிருப்பு வாசிகள் காலி செய்யவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்கிற புகாா்களும் வைக்கப்படுகிறது. முக்கியமாக இந்த விடுதிகளில் உள்ள மாணவா்களின் கலாசார விவகாரங்களுக்கு பயந்து குடியிருப்பு வாசிகள் நகா்கின்றனா். இப்படி உரிமம் இல்லாத தற்காலிக விடுதிகளை முறைப்படுத்தவில்லை எனவும் புகாா் கூறுகின்றனா்.

Related Stories

No stories found.