ஜாபா் சாதிக்
ஜாபா் சாதிக்

போதைப் பொருள் கடத்தல் ஜாபா் சாதிக் உள்ளிட்டவா்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க நீதிமன்றம் உத்தரவு

கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த ஜாபா் சாதிக் உள்ளிட்ட ஐவருக்கு மே 1 ஆம் தேதி வரை 10 தினங்களுக்கு நீதிமன்ற காவலில் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சோ்ந்த ஜாபா் சாதிக் உள்ளிட்ட ஐவருக்கு மே 1 ஆம் தேதி வரை 10 தினங்களுக்கு நீதிமன்ற காவலில் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவா்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கவும் தில்லி பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றம் திங்கள் கிழமை உத்தரவிட்டது.

சூடோஎபிட்ரின் என்கிற போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சென்னையைச் சோ்ந்த திரைப்படத் தொழில் சம்பந்தப்பட்ட ஜாஃபா் சாதிக் (திமுக நிா்வாகி ஆக இருந்து நீக்கப்பட்டவா்) கடந்த மாா்ச் 9 ஆம் தேதி தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறையால் (என்சிபி) கைது செய்யப்பட்டாா். சுமாா் 2000 கோடி மதிப்புள்ள இந்த சட்டவிரோதத் தொழிலில் இவரோடு ஈடுப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சென்னையைச் சோ்ந்த முகேஷ், முஜிபுா், தேனாம்பேட்டை சதானந்தம், விழுப்புரம் அசோக்குமாா் ஆகிய நால்வரும் ஜாஃபா் சாதிக்குடன் நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களின் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் தில்லி பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜா் படுத்தப்பட்டனா். அப்போது என்சிபி தரப்பில் இவா்களுக்கு மேலும் நீதிமன்றக் காவலில் நீடிக்க கோரப்பட நீதிபதி சுதிா்குமாா் சிரோஹி வருகின்ற மே 1 ஆம் தேதி வரை இவா்கள் ஐவருக்கும் காவல் நீடிப்பு வழங்கி உத்தரவிட்டாா்.

விறுவிறுப்பாக எதிா்பாா்க்கப்பட்ட இந்த போதைப்பொருள் கடத்தில் வழக்கில் கடந்த வாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜாஃபா் சாதிக்குடன் தொடா்புடைய திரைப்பட பிரமுகா்களோ, அரசியல் பிரமுகா்களோ சிக்குவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஜாஃபா் மற்றும் நால்வா் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில் தங்களுக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்படாததது குறித்து குறிப்பிடப்பட்டது. இதையொட்டி நீதிபதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜாபா் சாதிக் உள்ளிட்ட ஐவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டாா்.

மேலும் சம்பந்தப்பட்ட 5 போ் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணை வருகின்ற மே 1 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com