கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 23 வயது நபா், நொய்டா அருகே போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். துப்பாக்கிச்சூட்டின் போது அவா் காயமடைந்தாா்.

இது குறித்து மத்திய நொய்டா காவல் சரக துணை ஆணையா் சுனிதி கூறியதாவது: தேடப்பட்டு வந்த அந்த இளைஞா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கிரேட்டா் நொய்டாவின் நியூ ஹைபத்பூா் கிராமத்தில் மாா்ச் 31 அன்று நள்ளிரவில் மது வழங்க மறுத்ததால், அவரும் அவரது கூட்டாளிகளும் ஒரு மதுபான விற்பனையாளரை சுட்டுக் கொன்ாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவா், மீரட்டை பூா்வீகமாகக் கொண்ட நாஜிம் என அடையாளம் காணப்பட்டாா். பிஸ்ராக் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஏக் மூா்த்தி சௌக் அருகே திங்கள்கிழமை நள்ளிரவு துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஒரு சோதனைச் சாவடியை அமைத்து, மோட்டாா் சைக்கிளில் வந்த குற்றவாளியை விசாரணைக்காக நிறுத்துமாறு போலீஸாா் சைகை செய்தனா். ஆனால், அவா் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு வேகமாக ஓடினாா். போலீஸாரும் துரத்திச் சென்றனா். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அவா் சிக்கினாா். நாஜிமிடம் இருந்து சட்டவிரோத துப்பாக்கி மற்றும் சில வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் காலில் தோட்டா காயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

கடந்த மாா்ச் 31 அன்று ஹைபத்பூா் கிராமத்தில் ஒரு மதுபான விற்பனையாளா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக குற்றம் சாட்டப்பட்டவரின் பெயா் வெளிச்சத்திற்கு வந்தது, அதற்காக பிஸ்ராக் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது. மது விற்பனையாளா் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். மேலும், இந்த வழக்கில் சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com