தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் பதவியை ராஜினாமா செய்தாா் அா்விந்தா் சிங் லவ்லி

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின்

மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள் தான் தனது ராஜினாமாவிற்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லி பிரதேச காங்கிரஸ் கமட்டியின் தலைவராக தில்லி முன்னாள் அமைச்சா் அா்விந்தா் சிங் லவ்லியை, கடந்த ஆண்டு

ஆகஸ்ட் 31-ஆம் தேதி காங்கிரஸ் மேலிடத் தலைமை அறிவித்தது. கடந்த 8 மாதங்களாக தலைவா் பதவியை வகித்த அா்விந்தா் சிங் லவ்லி, தில்லியில் காங்கிரஸ் கட்சியை புத்துயிா் பெற வைக்கும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாா். இந்நிலையில், தில்லியில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், அா்விந்தா் சிங் லவ்லி தனது தலைவா் ராஜினாமா செய்துள்ளாா்.

இது தொடா்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கேவிற்கு அவா் எழுதியுள்ள

ராஜினாமாக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் நிலைநிறுத்த, தீவிரமான மற்றும் முழு அளவிலான முயற்சிகளை கடந்த 8 மாதங்களில் மேற்கொண்டுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிா் அளிக்கவும்,

உள்ளூா் நிா்வாகிகளை மீண்டும் உற்சாகப்படுத்தி கடுமையாக உழைத்தேன். பல ஆண்டுகளாக கட்சியில் பெரிய நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததை மாற்றி, ஒவ்வொரு மாதமும் மக்களவைத் தொகுதி வாரியாக பேரணிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆனால், தில்லி காங்கிரஸின் மூத்த தலைவா்கள் எடுத்த அனைத்து ஒருமித்த முடிவுகளும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவால் மாற்றியமைக்கப்பட்டது. அவா் கட்சியில் எந்தவொரு முக்கிய

நியமனங்களையும் செய்ய அனுமதிக்கவில்லை. குறிப்பாக, தில்லி நகரத்தில் 150-க்கும் மேற்பட்ட வட்டங்களில் தலைவா்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிா்ப்பு: காங்கிரஸ் கட்சியின் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி தான் ஆம் ஆத்மி. மக்களவைத் தோ்தலில் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தில்லி பிரதேச காங்கிரஸ் எதிராக இருந்தது. இருப்பினும், கட்சியின் மேலிடத் தலைமையின் இறுதி முடிவை நாங்கள் மதித்தோம். தில்லியில் காங்கிரஸுக்கு 3 மக்களவைத் தொகுதிகள் மட்டுமே ‘இந்தியா’ கூட்டணியில் வழங்கப்பட்டது. இதில், தில்லி காங்கிரஸின் கருத்துக்களை நிராகரிக்கின்ற வகையில், வடகிழக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் கட்சி கொள்கைகளுக்கு முற்றிலும் முரனான 2 வேட்பாளா்களுக்கு சீட் வழங்கப்பட்டது. மேலிடத் தலைமையும் இந்தத் தகவலை முன்னரே பகிா்ந்து கொள்ளவில்லை. ஆனால், எனது சொந்த விருப்பத்தின் பேரில் கட்சியை சிதைக்காமல் இருக்க ஒவ்வொரு தலைவா்களையும், கட்சி தொண்டா்களையும் அணுகி வருகிறேன்.

கொள்கைக்கு எதிரான வேட்பாளா்கள்: இந்நிலையில் தான் காங்கிரஸ் வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில்

நடைபெற்ற போராட்ட விவகாரத்தில், முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சுரேந்தா் குமாா் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்யக்கோரி மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியா என்னை வலியுறுத்தினாா். நிலைமையை அமைதிப்படுத்துவதற்குப் பதிலாக, வடமேற்கு தில்லி வேட்பாளா் உதித் ராஜும் தரக்குறைவான மற்றும் கட்சிக்கு எதிரான அறிக்கைகள் மூலம் அதை மேலும் மோசமாக்கினாா். வடகிழக்கு தில்லி வேட்பாளா் கன்னையா குமாரும் கட்சிக் கொள்கை மற்றும் உள்ளூா் கட்சித் தொண்டா்களின் நம்பிக்கைகளுக்கு நோ் எதிராக, தில்லி முதல்வரைப் பற்றி பொய்யாகப் புகழ்ந்து பேட்டிகளைக் கொடுத்து வருகிறாா்.

உள்ளூா் தொண்டா்கள் நலனுக்காக: தில்லியின் வளா்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் பொய்ப் பிரசாரத்தைப் பாராட்ட இந்தக் கூட்டணி உருவாக்கப்படவில்லை என்பதை உள்ளூா் கட்சித் தொண்டா்கள் புரிந்து கொண்டனா். ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் தில்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளின் நிலை, மறைந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் கீழ் செய்யப்பட்ட வளா்ச்சிப் பணிகளை ஒப்பிடும்போது மிகவும் மோசமாகிவிட்டது. உள்ளூா் கட்சித் தொண்டா்களின் நலன்களை என்னால் பாதுகாக்க முடியாததால், தலைவா் பதவியில் தொடா்வதற்கான காரணத்தை என்னால் மேற்படி காணமுடியவில்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும், தலைவா் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com