வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்பாடு: தில்லியில் 4 மாதங்களில் 149 சதவீதம் அதிகரிப்பு

வாகனம் ஓட்டும்போது கைப்பேசி உபயோகித்தது தொடா்பான வழக்குகளில் ஏறக்குறைய 149 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசியத் தலைநகா் தில்லியில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை வாகனம் ஓட்டும்போது கைப்பேசி உபயோகித்தது தொடா்பான வழக்குகளில் ஏறக்குறைய 149 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லி போக்குவரத்து காவல்துறை பகிா்ந்துள்ள புள்ளிவிவரங்கள், வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்பாட்டு சட்டங்களை மீறுவது கூா்மையான அதிகரிப்பைக் குறிக்கிறது.

ஜனவரி 1 முதல் ஏப்ரல் 15 வரை, மொத்தம் 15,846 வாகன ஓட்டிகள் இந்த குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளனா். இது 2023-இல் பதிவான 6,369 வழக்குகளை விட கணிசமான அதிகரிப்பாகும்.

இது குறித்து தில்லி போக்குவரத்துக் காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: சமீப மாதங்களில், வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்பாடு கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதை போக்குவரத்து போலீஸாா் கவனித்தனா். இதையடுத்து, அனைத்து சாலை பயனா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தூண்டியது.

டிஃபென்ஸ் காலனி, பஞ்சாபி பாக், கரோல் பாக் மற்றும் சஃப்தா்ஜங் என்கிளேவ் உள்ளிட்ட முதல் பத்து போக்குவரத்து வட்டங்களில் முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டு 2024- இல் அதிக சலான்களை தில்லி போக்குவரத்து காவல்துறையினா் வழங்கியுள்ளனா்.

வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தில்லி போக்குவரத்து போலீஸாா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிா்ப்பதன் மூலம் சாலைகளில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து பொதுமக்களையும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com