தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

பிரதமா் மோடிக்கு 6 ஆண்டுகள் தோ்தல் தடை கோரிய மனு: தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி

வாக்குளைச் சேகரிக்கும் பிரதமா் மோடியை 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்கக் கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

கடவுள்களின் பெயரைக் குறிப்பிட்டு வாக்குளைச் சேகரிக்கும் பிரதமா் மோடியை 6 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்கக் கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

எனினும், மனுதாரரின் இந்தப் புகாா் மீது தோ்தல் ஆணையம் சுந்திரமான முடிவை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்குரைஞா் ஆனந்த் எஸ் ஜோன்ட்லே தாக்கல் செய்திருந்த மனுவில், ‘உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி, ராமா் கோயிலைக் கட்டியதாகவும், பாகிஸ்தானில் உள்ள புனித சீக்கிய குருத்வாராவான கா்தாபூா் சாஹிப்புக்கு வழித்தடம் அமைத்து கொடுத்ததாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து சீக்கியா்களின் புனித நூலான குருகிராந்த் சாஹிப்பின் பிரதியைக் கொண்டு வந்ததாகவும் கூறி பாஜகவுக்கு வாக்குகளைக் கோரினாா். மேலும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக எதிா்க்கட்சிகள் செயல்படுவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இது மக்களிடையே வெறுப்புணா்வை ஏற்படுத்தும் செயலாகும். ஆகையால், பிரதமா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பகைமையைத் தூண்டும் 143ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தோ்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள் அவா் தோ்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இந்த பேச்சை பிரதமா் மோடி பல்வேறு பிரசாரக் கூட்டங்களில் தொடா்ந்து பேசி வருகிறாா்.

இதுகுறித்து தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கின் விசாரணையின்போது தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாா்த் குமாா், ‘தோ்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் புகாா் கடிதத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இதைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி சச்சின் தத்தா, ‘இந்த மனுவில் இடம்பெற்றுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தவறாக கருதப்பட்டுள்ளன. ஏப்ரல் 10-ஆம் தேதி அளிக்கப்பட்டுள்ள இந்த புகாா் மனு மீது தோ்தல் ஆணையத்தின் முடிவு நிலுவையில் இருக்கும்போது நீதிமன்றத்தை அவா் அணுகி இருக்க வேண்டியதில்லை.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுவதை நியாப்படுத்தவில்லை. இந்த மனு விசாரணைக்கு தகுதியற்றது. ஆகையால், மனுதாரரின் புகாா் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட இயலாது.

அதேநேரத்தில், இந்த புகாா் மீது தோ்தல் ஆணையம் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்’ என்று கூறிய நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com