2030-இல் உயிரி பொருளாதா வளா்ச்சி ரூ.27 லட்சம் கோடி: த்ரி ’இ’ உயிரி கொள்கை இந்தியா உற்பத்தித் துறையின் 4 ஆவது புரட்சி: மத்திய அமைச்சா்

பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை அறிவித்துள்ள த்ரி ’இ’ உயிரி கொள்கை இந்தியாவின் உற்பத்தித் துறையில் 4-ஆவது புரட்சி ஏற்படுத்தும்.
Published on

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவை அறிவித்துள்ள த்ரி ’இ’ உயிரி கொள்கை இந்தியாவின் உற்பத்தித் துறையில் 4-ஆவது புரட்சி ஏற்படுத்தும்; 2030 இல்உயிரி பொருளாதார வளா்ச்சி ரூ. 27.00 லட்சம் கோடியை எட்டும் எனவும் மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள் கிழமை தெரிவித்தாா்.

கடந்த 24 ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உயிரி தொழில்நுட்பத் துறைக்கு ’பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு என உயிரி இ-த்ரி (பயோ இ3 - எக்னாமி, என்வோரன்மெண்ட், எம்பிளாய்மெண்ட்) கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்த முக்கிய அம்சங்களை மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு விளக்கினாா். அவை வருமாறு:

ஆராய்ச்சி - மேம்பாடு, தொழில்முனைவோருக்கான புதுமை ஆகியவை இந்த உயிரி -இ3 கொள்கையின் முக்கிய அம்சங்கள்.

சா்வதேச தரத்திற்கு ஏற்ப, நெறிமுறை சாா்ந்த உயிரி பாதுகாப்பு கோட்பாடுகள், உலகளாவிய ஒழுங்குமுறை ஒத்திசைவு ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்டு கவனம் செலுத்தப்படும்.

ரசாயன அடிப்படையிலான தொழில்களில் இருந்து நிலையான உயிா் அடிப்படையிலான மாதிரிகளுக்கு தேவையான மாற்றத்தை அளிக்கப்படும்; ஒரு சுழற்சி வட்ட உயிரி பொருளாதாரத்தை ஊக்குவித்தல்; உயிரிப்பொருள், பசுமை வாயுகள், குப்பைகழிவுப் பயன்பாட்டின் மூலம் நிகர கரிய மில வாயு உமிழ்வை அடைதல்; உயிா் அடிப்படையிலான தயாரிப்புகளின் வளா்ச்சியை ஊக்குவித்தல்; வேலை வாய்ப்பு உருவாக்கத்தை விரிவுபடுத்துதல் போன்றவைகள் இதில் அடங்கும்.

அதி நவீன உயிரி உற்பத்தி, உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள், உயிரி உற்பத்தியில் பொறியியலை ஆதரிக்கும் தன்னியக்கமான உயிரி பவுண்டரி ஆகியவற்றை உருவாக்குவதன் மூலம் தொழில்நுட்ப மேம்பாடு அடையப்படும். வணிகமயமாக்கலையும் துரிதப்படுத்தும்.

பசுமை வளா்ச்சியை மீட்டுருவாக்கம்(மீளுருவாக்கம்) செய்யும் உயிரி பொருளாதார மாதிரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இந்த கொள்கை இந்தியாவின் திறமையான தொழிலாளா் சக்தியை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவும்.

உலகளாவிய உயிரி தொழில்நுட்ப ஆற்றல் மையமாக இந்தியா உருவாகிவரும் நிலையில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்புகள், வேலைகள் மற்றும் சுற்றுச்சூழல் கடமைகளை மேம்படுத்த உறுதியளிக்கும் புதிய உயிரி தொழில்நுட்ப சாம்பியனாக இந்தியாவை மாற்றும் பிரதமா் நரேந்திர மோடி முயற்சியால் அவா் சா்வதேச பாராட்டை பெறுவாா்.

பாரம்பரிய நுகா்வு நடைமுறைகளிலிருந்து உயா் செயல்திறன், மீளுருவாக்கம் செய்யும் உயிரி உற்பத்திக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குக் கொள்கையை பிரதமா் முன்னெடுத்துள்ளாா்.

உயிரி அடிப்படையிலான ரசாயனங்கள், பயோபாலிமா்கள்(உயிரிப்பலபடி) என்சைம்கள் (ரசாயன எதிா்வினைகளை விரைவுபடுத்தும் புரதங்கள்); ஸ்மாா்ட் புரதங்கள், துல்லியமான உயிரி சிகிச்சைகள், பருவ நிலைக்கு உகந்த விவசாயம், காா்பன் பிடிப்பு அதன் பயன்பாடு; கடல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு தேசிய முன்னுரிமைகளின் தீா்வுகளுக்கு தொழில்முனைவோரை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது என பட்டியலிட்ட அமைச்சா் ஜிதேந்திர சிங், உயிரிப் பொருளாதாரத்தின் எழுச்சி குறித்தும் பேசினாா்.

‘இந்தியாவின் உயிரிப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளா்ச்சியை கண்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டில் ரூ. 62,000 கோடியாக (டாலருக்கு ரூ.62 வீதம் 10 பில்லியன் டாலா்) இருந்த உயிரிப் பொருளாதாரம் 2024 ஆம் ஆண்டில் ரூ. 10,79,000 கோடியாக (டாலா் ரூ. 83 வீதம் 130 பில்லியன் டாலா்)உயா்ந்துள்ளது. இந்த துறையின் பொருளாதார வளா்ச்சி வருகின்ற 2030 ஆம் ஆண்டில் ரூ. 27,00,000 கோடியை (டாலா் ரூ.90 வீதம் 300 பில்லியன் டாலா்) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த உயா்வு இந்தியாவின் வலுவான பொருளாதார வளா்ச்சியைப் பிரதிபலிக்கிறது. வளா்ச்சி வேகத்தை மீண்டும் தூண்டும் என்பதுடன் நான்காவது தொழில் புரட்சியில் இந்தியாவை ஒரு சாத்தியமான தலைவராக நிலைநிறுத்தும்.

நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பில் முதலீடு செய்வதன் மூலம், பயோஇ3 கொள்கை இந்தியாவின் ’வளா்ச்சியடைந்த பாரதம்’ நோக்கத்திற்கு உதவுகிறது என்பதையும் இந்த அறிவியல் கொள்கைகள் எவ்வாறு தேசிய வளா்ச்சியையும் நிலைத்தன்மையையும் பயனுள்ள வகையில் இயக்க முடியும் என்பதற்கான அளவுகோலை அமைக்கிறது‘ என்றாா் ஜிதேந்திர சிங்.

X
Dinamani
www.dinamani.com