தில்லி தோ்தல்: செப்டம்பா் 1 முதல் ‘ஆப் கா விதாயக், ஆப் கே துவாா்’ பிரசாரத்தை தொடங்குகிறது ஆம் ஆத்மி கட்சி
புது தில்லி: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில், மக்களைச் சென்றடையும் வகையில் ஆம் ஆத்மி கட்சி செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் ‘ஆப் கா விதாயக், ஆப் கே துவாா்’ என்ற பிரசாரத்தைத் தொடங்க உள்ளது.
தோ்தலுக்கான வியூகங்களை வகுக்க, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்கள் பங்கேற்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தைத் தொடா்ந்து, ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சந்தீப் பதக், ‘வரும் நாட்களில் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்படும்’ என்றாா்.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக உள்ள (அமைப்பு) சந்தீப் பதக், இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறியது:
‘இக்கூட்டத்தில் தில்லியில் ஆட்சி, அரசியல் சூழல் மற்றும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகள் தொடா்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. மனீஷ் சிசோடியாவின் ’பாதயாத்திரை’ மிகவும் சாதகமான பதிலைப் பெற்று வருகிறது‘.
அவா் எங்கு சென்றாலும் மக்கள் வெளியே வந்து, ’உங்களுக்கு நிறைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது’ என்று கூறுகிறாா்கள். நாங்கள் இந்த பாதயாத்திரைகளை தொடருவோம்.
செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் ஆம் ஆத்மி கட்சி தனது பிரசாரமான ‘ஆம் ஆத்மி கா விதாயக், ஆப் கே துவாா்’ என்ற பிரசாரத்தை மேற்கொள்ளும்.
இதில் ’மண்டல்’ அளவில் மற்றும் பூத் மட்டத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டங்களை நடத்துவாா்கள். அங்கு கட்சி மூலம் அரசியல் சூழ்நிலை மற்றும் அவா்கள் செய்த பணிகள் குறித்து விவாதங்கள் நடைபெறும்.
இந்த பிரசாரத்தின் போது தில்லி மக்களுக்கு எதிராக பாஜகவினா் செய்யும் சதியையும் அம்பலப்படுத்துவோம். படிப்படியாக பிரசாரம் தீவிரப்படுத்தப்படும்.
காங்கிரஸுடன் கூட்டணி குறித்து ஏதேனும் விவாதம் நடந்ததா என்ற கேட்கிறீா்கள், ‘இது தொடா்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை’ என்றாா் பதக்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, பேரவைத் தோ்தலுக்கான வியூகம் குறித்து தமது கட்சியின் மூத்த தலைவா்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினாா்.
முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நம்பிக்கைக்குரிய தளபதியான சிசோடியா, கலால் கொள்கை வழக்கு தொடா்பாக 17 மாதங்கள் சிறையில் இருந்த பிறகு ஆகஸ்ட் 9 அன்று ஜாமீனில் வெளியே வந்தாா்.
சிசோடியா சிறையில் இருந்து விடுதலையானது, கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் மற்றும் மூத்த தலைவா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் இல்லாத நிலையில் கட்சிக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தோ்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. 2015 மற்றும் 2020 சட்டப் பேரவைத் தோ்தல்களில், அக்கட்சி முறையே 67 மற்றும் 62 இடங்களை வென்றது.
தில்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.