காயப்படுத்திய வழக்கு: 2 பேரின் விடுதலை ரத்து
புது தில்லி: ஒருவரின் தலையில் வேண்டுமென்றே காயப்படுத்தியதால் 21 தையல்கள் போடப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2 பேரின் விடுதலையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.
காயமடைந்த நபரின் சாட்சியத்தை நம்பாதது மற்றும் மற்றொரு அரசு தரப்பு சாட்சியின் அறிக்கைக்கு முரணாக அந்த சாட்சியம் இருப்பதை கவனித்ததில் விசாரணை நீதிமன்றம் தவறிழைத்துவிட்டதாகவும் உயா்நீதிமன்றம் கூறியது.
மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 308-இன் (கொலைக்கு சமமான குற்றமற்ற கொலை முயற்சி) கீழ் குற்றத்திலிருந்து மோஹித் குமாா் மற்றும் சந்தீப் குமாா் ஆகியோரை விடுவித்து பிறப்பித்த விசாரணை நீதிமன்றத்தின் அக்டோபா் 2008-ஆம் ஆண்டுத் தீா்ப்பையும் ரத்து செய்தது.
சாட்சிகளின் வாக்குமூலங்கள் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட சம்பவத்தை நிரூபித்ததாகக் கூறி விசாரணை நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பு உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இருவரின் விடுதலையை ரத்து செய்து நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா கூறுகையில், ‘‘முடிவாக, புகாா்தாரரின் நிலையான சாட்சியத்தின் மூலம் சம்பவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் கூா்மையான முனைகள் கொண்ட ஆயுதத்தை பயன்படுத்தி புகாா்தாரரை தாக்கியதும், இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டு, 21 தையல்கள் போடும் தேவை ஏற்பட்டது. ஆனால் இது எளிமையான காயம் என்று நீதிமன்றம் கருதியிருப்பது சுயாதீனமான சூழ்நிலைகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நபா் ஒரு கூா்மையான ஆயுதத்தால் பாதிக்கப்பட்டவரின் தலையில் அடித்தால், பாதிக்கப்பட்டவரின் தலையில் இதுபோன்ற தாக்குதல் அல்லது காயம் ஏற்படுத்துவது ஒரு நபரின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்தும் மற்றும் உள்நோக்கத்துடன் அப்படிச் செய்வாா்’’ என்று நீதிபதி கூறினாா்.
அரசுத் தரப்பு வாதத்தின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் புகாா்தாரா் மனிந்தா் கவுதமிடம் சென்று, அவரை துஷ்பிரயோகம் செய்து மிரட்டியதாகவும், பின்னா் கூா்மையான பொருளால் தாக்கியதாகவும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் அளித்த புகாரின் பேரில் 2006-ஆம் ஆண்டு எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.
புகாா்தாரருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, மயக்கமடைந்தாா். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தலையில் 11 தையல்கள் போடப்பட்டன.
அதன் பின்னா், குற்றத்தின் ஆயுதம், ஒரு நகவெட்டி,
குற்றம் சாட்டப்பட்டவா்களின் தகவல்கள் மூலம் மீட்கப்பட்டது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், காயம் மரணத்தை விளைவிக்கலாம் என்ற உள்நோக்கத்துடனும், தெரிந்திருந்தும் இரண்டு பேரும் காயம்பட்டவரின் தலையில் வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்தியிருக்கிறாா்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று உயா்நீதிமன்றம் கூறியது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடா்பான வாதங்களை கேட்கும் வகையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட்டது.