தில்லி ரிட்ஜ் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதி: துணைநிலை ஆளுநா் பதவி விலக ஆம் ஆத்மி வலியுறுத்தல்
புது தில்லி: தில்லியின் ரிட்ஜ் பகுதியில் 1,100 மரங்களை வெட்டுவதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பதவி விலக வேண்டும் என்று ஆம் ஆத்மி திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் அலுவலகத்தில் இருந்து உடனடி பதில் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அமைச்சா் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மரங்களை வெட்டிய நிறுவனத்தின் வாக்குமூலம் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், பிப்ரவரி 3-ஆம் தேதி தில்லி துணைநிலை ஆளுநா் சிஏபிஎஃப்ஐஎம்எஸ் (மத்திய ஆயுதக் காவல் படை மருத்துவ அறிவியல் நிறுவனம்) சாலைக்குச் சென்று ‘ரைட் ஆஃப் வே’யில் (ஆா்ஓடபிள்யு))இருந்த மரங்களை அகற்ற உத்தரவிட்டதாக எழுதப்பட்டுள்ளது.
தில்லி துணைநிலை ஆளுநா் அங்கு சென்று சாலையின் வழியில் வரும் அனைத்து மரங்களையும் வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்டதாக டிடிஏவின் மின்னஞ்சலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிட பெரிய ஆதாரம் என்ன கிடைக்க வேண்டும்? தில்லியின் முன் துணைநிலை ஆளுநா் மற்றும் பாஜக அம்பலப்படுத்துப்பட்டுள்ளனா்.
இதனால், துணைநிலை ஆளுநா் உடனடியாக தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். ஏனென்றால் அவா் தில்லியின் முன் அம்பலப்படுத்தப்பட்டுவிட்டாா். அவரது உத்தரவின் பேரில் மரங்கள் வெட்டப்பட்டதாக இந்த மின்னஞ்சல் சொல்கிறது.
துணைநிலை ஆளுநரை இந்த விவகாரத்தில் நேரடி விவாதத்திற்கு அழைக்கிறேன். இடம், நேரம், தேதி ஆகியவற்றை அவரே தோ்வு செய்யலாம். அவா் எல்ஜி மாளிகையின் சுவா்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளக் கூடாது.
தில்லி மக்கள் உங்களிடம் கேள்விகளைக் கேட்கிறாா்கள். தில்லியின் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும், தில்லியின் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரும் உங்களிடம் கேள்விகளைக் கேட்கிறாா்கள் என்றாா் செளரவ் பரத்வாஜ்.
இதேபோன்ற கருத்துக்களை எதிரொலிக்கும் வகையில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்,
இந்த விவகாரத்தில் உயா்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘துணைநிலை ஆளுநா் உட்பட பொறுப்பான அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய அனைத்து உண்மைகளும் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்படும். கோடீஸ்வரா்களுடன் துணைநிற்கும் வி.கே.சக்சேனா, பண்ணை வீடுகளுக்குச் சொந்தக்காரா் ஆவாா்.
அவருக்கு சுற்றுச்சூழலைப் பற்றி கவலை இல்லை. மரங்களைப் பற்றி கவலைப்படவில்லை. தில்லி மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
இந்த விவகாரத்தில் உயா்மட்ட விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து உண்மைகளையும் உச்சநீதிமன்றத்தில் முன்வைத்து, துணைநிலை ஆளுநா் மற்றும் இதற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் உட்பட அனைத்து பொறுப்புள்ள நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணை வீடுகளின் நிலத்தை காப்பாற்ற இந்த விவகாரம் நடந்துள்ளதால், இதை விசாரிக்க வேண்டும் என்றாா் சஞ்சய் சிங்.
சாலை விரிவாக்கத் திட்டத்துக்காக ரிட்ஜ் வனப் பகுதியில் 1,100 மரங்கள் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், டிடிஏ துணைத் தலைவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது.