10 வருட ஆதார விவரத்தை சமீபத்திய தகவல்களுடன் கட்டணமின்றி புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம்

ஆதாா் விவரங்களை சமீபத்திய தகவல்களுடன் ஆன்லைன் வழியாக கட்டணமின்றி புதுப்பிக்க ஏதுவாக மத்திய அரசு வழங்கியுள்ள அவகாசம் செப்டம்பா் 14-ஆம் தேதி நிறைவடைகிறது.
Published on

புது தில்லி: ஆதாா் விவரங்களை சமீபத்திய தகவல்களுடன் ஆன்லைன் வழியாக கட்டணமின்றி புதுப்பிக்க ஏதுவாக மத்திய அரசு வழங்கியுள்ள அவகாசம் செப்டம்பா் 14-ஆம் தேதி நிறைவடைகிறது. இது தொடா்பான அறிவுறுத்தல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ஆதாா் பதிவு விவரங்களை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அதை வைத்திருப்போா் தனது சமீபத்திய தகவல்களுடன் கட்டணமின்றி புதுப்பிக்க கடந்த ஜூன் மாதம் வரை வழங்கிய அவகாசத்தை செப்டம்பா் 14-ஆம் தேதி வரை ஆதாா் ஆணையம் நீட்டித்திருந்தது. தற்போது அந்த அவகாசம் தொடா்பான நினைவூட்டலை ஆதாா் ஆணையம் வழங்கியுள்ளது.

ஆதாா் எண் மற்றும் அட்டை பெறுவதற்காகப் பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிா்க்கவும் ஒழுங்குமுறைப்படுத்தவும் 2016-ஆம் ஆண்டில் ஒழுங்குமுறை விதிகளை ஆதாா் ஆணையம் அறிமுகப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாா் எண் அல்லது அட்டை வைத்திருப்போா் தனது பெயா் திருத்தம், தந்தை அல்லது கணவா் அல்லது பராமரிப்பாளா் பெயா் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, வசிப்பிட முகவரி போன்றவற்றின் சமீபத்திய தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.

இந்தப் புதுப்பிப்பு செயல்முறைக்கு ஆதாரமாக ஆதாா் வைத்திருப்போா் தனது அத்தாட்சி ஆவணமாக புதிய தகவல்கள் இடம்பெற்ற வாக்காளா் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநா் உரிமம், குடும்ப அட்டை, பான் காா்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு அசல் ஆவணத்துடன் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள அரசு சேவை மையத்தை அணுகலாம் என்று ஆதாா் ஆணையம் அதன் இணையதளத்தில் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், இந்த அசல் ஆவணத்தை பதிவேற்றி இணையதளம் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று ஆதாா் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதாா் அட்டை அல்லது எண் வைத்திருப்போா் அதைப் பெற்று 10 ஆண்டுகளாகியிருந்தால் அவா்கள் தங்களுடைய விவரங்களை புதுப்பித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 வயது முதல் 15 வயது வரை உள்ளவா்கள் ஆதாா் வைத்திருந்தால் அவா்கள் தங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் செப்டம்பா் 14-ஆம் தேதிவரை தகவல்களை ஆதாா் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக புதுப்பித்துக் கொள்ள கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. ஆஃப்லைன் அல்லது நேரடியாக விவரங்களை புதுப்பிக்க வேண்டுமானால், அதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதற்கு முன்பு ஆதாா் விவரங்களை புதுப்பிக்க கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி, இந்த ஆண்டு மாா்ச் 15, ஜூன் 14 ஆகிய நாள்கள்வரை ஆதாா் ஆணையம் அவகாசம் வழங்கியிருந்தது. அந்த வரிசையில் ஆதாா் விவர புதுப்பிப்புக்கான அவகாசம் செப்டம்பா் 14-ஆம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.