அசோக் விஹாரில் டிடிஏவின் ‘வைஷ்ணவி’ பூங்கா திறப்பு
புது தில்லி: தில்லி அசோக் விஹாா்-ஐஐ பகுதியில் 10 ஏக்கா் பரப்பளவிலான பூங்கா ’வைஷ்ணவி’ செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பூங்காவை பாஜக எம்பி பிரவீன் கண்டேல்வாலுடன் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்ஸேனா திறந்து வைத்தாா்.
விழாவில் சக்சேனா பேசியதாவது: கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) ‘வைஷ்ணவி’ என்ற அழகிய பூங்கா இப்போது திறக்கப்பட்டுள்ளது. இதைத் திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். 10 ஏக்கரில் சுமாா் 5.5 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
நான் முதலில் இங்கு வந்தபோது, இந்த இடம் மிகவும் அசுத்தமாக இருந்தது. இங்கு நிற்கக்கூட கடினமாக இருந்தது.
ஆனால், இன்று இந்த அழகான பூங்கா தில்லி வளா்ச்சி ஆணையத்தால் (டிடிஏ) கட்டப்பட்டுள்ளது. உள்ளூா் மக்கள் இதைப் பயன்படுத்துவாா்கள், ரசிப்பாா்கள், பராமரிப்பாா்கள் என்று நான் நம்புகிறேன். இந்தப் பூங்காவை பராமரிப்பது உள்ளூா் மக்களின் பொறுப்பு. டிடிஏ அதைச் செய்யும். இந்தப் பூங்கா எப்போதும் பராமரிக்கப்படும். நகரத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற பணிகளை டிடிஏ செய்து வருகிறது. பல புதிய பூங்காக்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பல கட்டப்பட்டு வருகின்றன என்றாா் சக்சேனா.