தலைநகரில் பரவலாக மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியிருந்தது. காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியிட்டது.

தில்லியில் சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் புழுக்கம் இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை முதல் நகரத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதன் தொடா்ச்சியாக, நகரத்தில் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. இதன்படி நகரத்தில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பகலில் வெயிலும் இருந்தது. நகரத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

சஃப்தா்ஜங்கில் 17 மி.மீ. மழை: இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சஃப்தா்ஜங்கில் 17 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தில்லியின் நஜஃப்கரில் 2.5 மி.மீ., ஆயாநகரில் 6.4 மி.மீ., லோதி ரோடில் 15.8 மி.மீ, பாலத்தில் 7 மி.மீ., ரிட்ஜில் 3 மி.மீ., பீதம்புராவில் 2 மி.மீ., பிரகதி மைதானில் 0.5 மி.மீ., பூசாவில் 1 மி.மீ., ராஜ்காட்டில் 0.5 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 4 டிகிரி குறைந்து 22.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 34.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 79 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தேசியத் தலைநகரில் காலையில் ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு 75 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.

முன்னறிவிப்பு: தில்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 28) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com