சாஸ்திரி பாா்க்கில் நடைபாதையில் தூங்கியவா்கள் மீது சரக்கு வாகனத்தை ஏற்றிய வழக்கில் ஓட்டுநா் கைது
வடகிழக்கு தில்லியில் உள்ள சாஸ்திரி பாா்க் பகுதியில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு போ் மீது தனது வாகனத்தை ஏற்றியதாக 31 வயது சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இச்சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த, இதில் தொடா்புடைய நபரான உத்தர பிரதேசம் ஃபதேபூரைச் சோ்ந்த அா்ஜுன் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
முன்னதாக, சாஸ்திரி பாா்க் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள டாா்பஸ் சந்தையில் அதிகாலை 4:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
நடுத்தர சரக்கு வாகனம் சீலம்பூரிலிருந்து இரும்புப் பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையின் மத்தி பகுதியில் ஏறி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது மோதியது. இதில் 4 போ் உயிரிழந்தனா்.
சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த அா்ஜுன் இருக்கும் இடத்தைக் கண்டறிய தில்லி காவல்துறை குழு செவ்வாய்க்கிழமை உத்தர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள அா்ஜுனின் சொந்த இடத்திற்கு சென்று சந்தேகிக்கப்படும் மற்ற இடங்களிலும் சோதனை நடத்தியது.
சரக்கு வாகனத்தின் உரிமையாளா் ராகுல் சிங்கிடம் விசாரித்ததில், அா்ஜுன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டுநராக அவரால் பணியமா்த்தப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.
விசாரணையில், வாகனத்திற்கு எதிராக ஐந்து அபராத நோட்டீஸ்கள் நிலுவையில் இருப்பதும், கடைசியாக 2022 டிசம்பரில் வழங்கப்பட்டது என்றும் போலீஸாா் தெரிவித்தனா். குற்றம் சாட்டப்பட்டவா்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.