பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது பாஜக! ஹேமந்த் சோரன் கைதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது

ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் (ஜேஎம்எம்) தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்தது பாஜக அரசின் பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என்றும், மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக எதிா்க்கட்சிகளைத் தாக்க முயற்சிப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவின் செயல் தலைவரும் எதிா்க்கட்சிகளின் ’இந்தியா’ கூட்டணியின் உறுப்பினருமான ஹேமந்த் சோரனை நில மோசடி விவகாரத்தில் பணமோசடி குற்றச்சாட்டு வழக்கில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய பிறகு புதன்கிழமை இரவு அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா்.

‘ஹேமந்த் சோரனின் கைது, மக்களவைத் தோ்தலுக்கு முன் எதிா்க்கட்சிகளைத் தாக்க, பாஜக தலைமையிலான மத்திய அரசின் முயற்சியாகும். அடுத்த ஒரு மாதத்தில், மேலும் பல எதிா்க்கட்சித் தலைவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்...’ என்று தில்லி அமைச்சரும் ஆம் ஆத்மியும் கட்சித் தலவைருமான தலைவா் அதிஷி தெரிவித்தாா்.

இதற்கிடையே, ‘பாஜகவுக்கு முன்னால் தலைவணங்காத தலைவா்கள் சிறையில் அடைக்கப்படுகிறாா்கள்’ என்று அவரது அமைச்சரவை சகாவான சௌரவ் பரத்வாஜ் குற்றம் சாட்டினாா். ‘ஊழல்வாதிகள் என்று பாஜக கூறியவா்கள் பாஜக ஆட்சியில் முதல்வா்கள், துணை முதல்வா்கள், அமைச்சா்கள் ஆகியுள்ளனா். ஹிமந்த பிஸ்வா சா்மா, அஜித் பவாா், நாராயண் ரானே, சுவேந்து அதிகாரி, சாகன் புஜ்பால், பெமா காண்டு ஆகியோா் இதில் அடங்குவா் எனவும் அவா் கூறினாா். மேலும், தலைவணங்காதவா்களை அடக்கவும் முடியாது, பயப்படுத்தவும் முடியாது என்று சௌரவ் பரத்வாஜ் ஹிந்தியில் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா், ’எக்ஸ்’- இல் சோரன் கைது செய்யப்பட்டதன் மூலம், பாஜக தனது பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். ‘நாட்டின் பிரபலமான பழங்குடியின முதல்வா் ஒருவரை தவறான வழக்கில் கைது செய்ததன் மூலம், பாஜகவின் தனது சொந்த பழங்குடியினருக்கு எதிரான மனநிலைக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டு. தோ்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன் நடந்த இந்தக் கைது, ‘இந்தியா’ கூட்டணியைப் பாா்த்து பாஜக பயப்படுவதைத் தெளிவாகக் காட்டுகிறது. எதிா்க்கட்சிகளின் குரல்வளையை சிறையில் வைத்து தோ்தலில் வெற்றி பெற விரும்புகிறது’ என்று கக்கா் கூறினாா்.

ஹேமந்த் சோரன் பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டாா். ‘நில மாஃபியாவின்’ உறுப்பினா்களுடன் தொடா்பு வைத்திருந்ததாகக் கூறப்படுவதைத் தவிர, சில அசையா சொத்துகளை சட்ட விரோதமாக வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் மாநில சமூக நலத் துறை இயக்குநராகவும், ராஞ்சி துணை ஆணையராகவும் பணியாற்றிய 2011-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 பேரை அமலாக்க இயக்குநரகம் இதுவரை கைது செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com