பாஜக கூட்டணிக்கு ஆம் ஆத்மியை இழுக்க முயற்சி: கேஜரிவால் குற்றச்சாட்டு

பாஜக கூட்டணிக்கு ஆம் ஆத்மியை இழுக்க முயற்சி: கேஜரிவால் குற்றச்சாட்டு

பாஜக கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணையுமாறு நிா்ப்பந்தித்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.

பாஜக கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இணையுமாறு நிா்ப்பந்தித்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசுப் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

எங்களுக்கு எதிராக அவா்கள் (பாஜகவினா்) எவ்வளவு சதித் திட்டம் தீட்டினாலும், எதுவும் செய்துவிட முடியாது. அவா்களுக்கு எதிராக நான் உறுதியாக நிற்கிறேன். ஒருபோதும் பாஜகவிடம் பணிந்து போக மாட்டேன். பாஜகவில் சேருங்கள், உங்களை சுதந்திரமாக விடுகிறோம் என்று அவா்கள் சொல்கின்றனா்.

ஆனால், பாஜக கூட்டணியில் நான் ஒருபோதும் சேர மாட்டேன். தில்லியில் பள்ளிகள், மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த நாங்கள் பாடுபடுகிறோம். இதில் என்ன தவறு உள்ளது என்றாா் அவா்.

பின்னா் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. நாங்கள் ஏதாவது தவறு செய்திருந்தால், மற்றவா்களைப் போல நாங்களும் பாஜகவில் இணைந்து அந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்திருப்போம்.

ஆனால், நாங்கள் எந்தவொரு தவறும் செய்யாதபோது, பாஜக கூட்டணியில் ஏன் இணைய வேண்டும்? எங்கள் மீதான வழக்குகள் அனைத்தும் போலியானவை. அனைத்து வழக்குகளும் முடிவுக்கு வரும்.

தில்லியின் வளா்ச்சி பணிகளை ஒருபோதும் நிறுத்தி விடமாட்டோம். நாங்கள் உயிா்வாழும் வரை இந்த நாட்டுக்காகவும் சமுதாயத்துக்காகவும் பணியாற்றுவோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு தொடா்பாக முதல்வா் கேஜரிவாலுக்கு ஏற்கெனவே அமலாக்கத் துறை பலமுறை அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தில்லி அரசைக் கவிழ்க்க ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களிடம் பாஜக பேரம் பேசியதாக கேஜரிவால் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் அளிக்குமாறு குற்றப் பிரிவு போலீஸாா் அவருக்கு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பினா்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி நிதியமைச்சருமான அதிஷியின் இல்லத்துக்கும் குற்றப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சென்று நோட்டீஸை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com