தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.


புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. இதற்கிடையே, அடுத்த இரண்டு நாள்களுக்கு சுமாா் 20-30 கிமீ வேகத்தில் தரைமேற்பரப்பு காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெப்பநிலை உயா்வு: தில்லியில் செவ்வாய்க்கிழமை மழை எதுவும் பதிவாகவில்லை. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி குறைந்து 7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 2 டிகிரி குறைந்து 21 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 47 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூா், தில்லி ரயில் நிலையம், ஆயாநகா், லோதி ரோடு, நரேலா, பாலம், ரிட்ஜ், பீதம்புரா, பிரகதி மைதான், பூசா, ராஜ்காட், சல்வான் பப்ளிக் ஸ்கூல் உள்ளிட்ட பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி முதல் 10.5 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தலைநகரில் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 280 புள்ளிகளாகவும், திங்கள்கிழமை 180 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. ஆனால், ஒட்டுமொத்தக் காற்று தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 141 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. சில இடங்களில் காற்று தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை (பிப்ரவரி 7) மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com