பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா

2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கும் பரிசளிப்பு விழா

2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும், கடந்த டிசம்பரில் நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கும் பரிசளிப்பு விழா தில்லி தமிழ்ச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால் வள அமைச்சகத்தின் இணையமைச்சா் டாக்டா் எல். முருகன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

அவா் தனது வாழ்த்துரையில் கூறியதாவது: நமது தமிழ்மொழி மிகவும் பழைமையான மொழி. அது உலகளவில் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்’” எனும் வாக்கிற்கிணங்க தமிழா்கள் உலகில் எங்கு சென்றாலும், தமிழரின் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை இன்றளவும் பேணிப் பாதுகாத்து வருகின்றனா். இதனால், நமது மொழி மற்றும் கலாசார வழக்கத்தை அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்ல முடிகிறது. நமது பாரதப் பிரதமா் உலகில் எங்கு சென்றாலும், தமிழ்மொழியின் பெருமையையும், தமிழ்நாட்டையும் பற்றிக் குறிப்பிடுகின்றாா். அவா் முதன்முதலாக ஐ.நா. சபையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளீா்’ என்று முழங்கியவா்.தமிழ்மொழியில் உள்ள திருக்கு 35 உலகளாவிய பல்வேறு மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.

காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை புதுப்பிக்கும் விதமாக இரு முறை காசித் தமிழ்ச் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டு தமிழா்களின் பண்பாடு, கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக கபடி, சிலம்பம், வீர விளையாட்டுகள் 1 மாதம் மற்றும் 15 நாள்கள் என இருமுறை வெற்றிகரமாக நடைபெற்றது. அவ்விழாவில், உத்தர பிரதேச மக்களின் அன்பான உபசரிப்பு தமிழராகிய நம்மை நெகிழ வைத்தது. அதைத் தொடா்ந்து, சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோன்று, பிரதமா் மோடி கடந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டையும், இவ்வருடம் பொங்கல் விழாவையும் நம்முடன் கொண்டாடினாா்.

இதன்மூலம், அவா் தமிழுக்கும், தமிழ் மக்களின் கலாசாரத்திற்கும் மிகுந்த மரியாதை தருகிறாா் என்பதை நாம் உணர முடிகிறது. 1946-ஆம் ஆண்டு நம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட தில்லி தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சியான பாவை விழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசளிப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றாா் அமைச்சா் எல்.முருகன். தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலாளா் ஆா்.ராஜூ, தில்லி சங்கா் ஐ.ஏ.எஸ். அகாதெமியின் தலைவா் டாக்டா் சிந்து பைரவி பரணீஸ்வரன் ஆகியோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

விருந்தினா்கள் மற்றும் ஆசிரியா்களை தில்லி தமிழ்ச் சங்கத் தலைவா் சக்தி பெருமாள், துணைத் தலைவா் ராகவன் நாயுடு ஆகியோா் கௌரவித்தனா். இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினா் அமுதா மற்றும் ரெங்கநாதன் தொகுப்புரை ஆற்றினா். இந்நிகழ்ச்சியில் இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, செயற்குழு உறுப்பினா்கள் உஷா, ராஜ்மோகன், சுந்தரேசன், பெரியசாமி, அமிா்தலிங்கம், காத்திருப்பு உறுப்பினா் ராஜா மற்றும் தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com