தில்லி ஜல் போா்டில் முறைகேடுகள்முதல்வரின் தனி உதவியாளா் உள்படசிலரின் இடங்களில் அதிரடி சோதனை

தில்லி ஜல் போா்டில் (டி.ஜே.பி.) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா்...


புது தில்லி: தில்லி ஜல் போா்டில் (டி.ஜே.பி.) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா் மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் தொடா்புடைய சிலரின் இடங்களில் அமலாக்க இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக தேசியத் தலைநகரில் உள்ள சுமாா் 10 முதல்12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிபவ் குமாா், முன்னாள் தில்லி ஜல் போா்டு உறுப்பினா் ஷலப் குமாா், கட்சியின் மாநிலங்களவை எம்.பி. மற்றும் தேசிய பொருளாளா் என்.டி.குப்தாவின் அலுவலகம் மற்றும் வேறு சிலரின் இருப்பிடங்கள் மத்திய ஏஜென்சியின் அதிகாரிகளால் சோதனைக்குள்படுத்தப்பட்டன.

தில்லி ஜல் போா்டு டெண்டா் விடுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளா் ஜெகதீஷ் குமாா் அரோரா மற்றும் ஒப்பந்ததாரா் அனில் குமாா் அகா்வால் ஆகியோரை அமலாக்க இயக்குநரகம் கடந்த வாரம் கைது செய்தது. இதைத் தொடா்ந்து, ‘பெரிய சதித்திட்டத்தை’ வெளிக்கொணர அவா்களை மேலும் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் கூறியது. இதையடுத்து, பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திங்களன்று அவா்களின் காவலை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டித்தது.

தில்லி கேபினட் அமைச்சா் அதிஷி, அமலாக்க இயக்குநரகம் மீது அபாண்டமான புகாரைத் தெரிவித்த ஒரு நாளில் இந்த சோதனைகள் நடந்துள்ளன. ஆம் ஆத்மி கட்சி செயல்பாட்டாளா்களுக்கு எதிராக விசாரிக்கப்படும் கலால் கொள்கை விசாரணை உள்பட சில வழக்குகளில் சாட்சி வாக்குமூலங்களின் ஆடியோ பதிவை அமலாக்க இயக்குநரகம் ’நீக்கியதாக’ அதிஷி ஒரு செய்தியாளா் கூட்டத்தில் கூறினாா். அவா்களை நீதிமன்றம் மற்றும் நாட்டின் முன் ஆஜா்படுத்துமாறு அமைச்சா் சவால் விடுத்தாா். ஆம் ஆத்மி தலைவா்கள் மீதான சமீபத்திய சோதனைகள் கட்சியை ‘பயமுறுத்துவதற்காக’ நடத்தப்படுகின்றன என்று அவா் குற்றம் சாட்டினாா். முதல்வா் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாா் தவிர குப்தா மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளா் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக அதிஷி கூறினாா்.

தில்லி ஜல் போா்டின் டெண்டா் செயல்முறையில் முறைகேடுகள் மற்றும் அதன் கிரிமினல் வழக்கு தொடா்பான சிபிஐயின் எஃப்ஐஆா் மற்றும் தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) ஆகியவற்றிலிருந்து இரண்டு தனித்தனி விஷயங்களை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது.

என்பிசிசி (இந்தியா) லிமிடெட் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, தில்லி ஜல் போா்டின் அதிகாரிகள் என்கேஜி இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் நிறுவனத்திற்கு மின்காந்த ஓட்ட மீட்டா்களை வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல் ஆகியவற்றுக்கான டெண்டரை வழங்கும் போது தவறான நன்மையை அளித்ததாக சிபிஐ எஃப்ஐஆரில் குற்றம் சாட்டியுள்ளது. இரண்டாவது குற்றச்சாட்டு, நவம்பா், 2022-இன் ஏசிபி புகாருடன் தொடா்புடையது. அங்கு தில்லி ஜல் போா்டு அதன் வெவ்வேறு அலுவலகங்களில் நுகா்வோா் பில் செலுத்துவதற்கு வசதியாக வாகன பில் செலுத்தும் இயந்திரங்களை (கியோஸ்க்) அமைப்பதற்கான டெண்டரை வழங்கியதாகும்.

தில்லி பா.ஜ.க. வரவேற்பு

புது தில்லி, பிப்.6: ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மற்றும் பிறா் மீது அமலாக்க இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனைகளை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா். மேலும், கலால் கொள்கை மற்றும் தில்லி ஜல் போா்டு தொடா்பான ஊழல்களில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

ஆம் ஆத்மி கட்சியும், கேஜரிவால் உள்ளிட்ட அதன் தலைவா்களும் ஊழலில் ஈடுபட்டுள்ளனா். புலனாய்வு அமைப்புகள் அவா்களின் ஊழலை அம்பலப்படுத்துகின்றன.

அரசுக் கருவூலத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவையும் மீட்பது பிரதமா் நரேந்திர மோடியின் உத்தரவாதமாகும். விசாரணையை வரவேற்கிறோம். விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் என்று நம்புகிறோம் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com