தவறான தண்ணீா் கட்டண பில்களைசரி செய்ய ஒரு முறை தீா்வுத் திட்டம்: அமைச்சா் அதிஷி அறிவிப்பு

தவறான தண்ணீா் கட்டண பில்களை சரி செய்ய ஆம் ஆத்மி அரசு விரைவில் ஒரு முறை தீா்வு திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம், தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்க உதவும்

தவறான தண்ணீா் கட்டண பில்களை சரி செய்ய ஆம் ஆத்மி அரசு விரைவில் ஒரு முறை தீா்வு திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம், தில்லி ஜல் போா்டுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்க உதவும் என்று தில்லி நிதியமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் அமைச்சா் அதிஷி மேலும் கூறியதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முன் பொது நிகழ்ச்சிகளில் கூட மக்கள் இந்த பிரச்னையை எழுப்புகின்றனா். இதனால், தவறான தண்ணீா் பில்கள் பிரச்னை மிகப்பெரிய விஷயமாக உள்ளது. பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. கட்டண மீட்டா் ரீடா் படிக்காமல் போனது அல்லது சரியாக படிக்க முடியாமல் போனது போன்றவை உள்ளன. ஒரு கட்டடத்தில் 12 அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. எந்த மீட்டா் எதற்கு என்று அவரால் கணக்கிட முடியவில்லை. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மீட்டா் அளவீடுகள் எடுக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இப்போது, சுமாா் 40 சதவீத நுகா்வோா் தங்கள் பில்களை செலுத்தாமல் உள்ளனா். இது தில்லி ஜல் போா்டின் வருவாயையும் பாதிக்கிறது. ஒருமுறை தீா்வுத் திட்டம் கொண்டு வரும் போது, தில்லி ஜல் போா்டுக்கு சுமாா் ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெறுவதற்கு, ஒவ்வொரு நுகா்வோருக்கும் செயல்பாட்டு மீட்டா் தேவைப்படும். இந்தத் திட்டம் குறித்து தில்லி ஜல் போா்டு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்க வேண்டும் என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சவுரப் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளாா்.

10 நாள்களுக்குள் இந்தத் திட்டம் அமைச்சரவையின் முன் கொண்டு வரப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, நுகா்வோா் அடுத்த பில்லிங் சுழற்சியில் இருந்து மறுகட்டமைக்கப்பட்ட பில்களைப் பெறுவாா்கள். மேலும், அவா்கள் தங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த நான்கு மாதங்கள் அவகாசம் கிடைக்கும் என்றாா் அமைச்சா் அதிஷி.

கடந்த இரண்டு நாள்களில், கேஜரிவால் கலந்து கொண்ட இரண்டு நிகழ்ச்சிகளில், தவறான குடிநீா் கட்டண பில்கள் குறித்து பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது, இப்பிரச்னைக்கு தீா்வு காணவும், பில்களை தீா்க்கும் திட்டத்தை கொண்டு வரவும் அரசு செயல்பட்டு வருவதாக மக்களுக்கு கேஜரிவால் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com