80% உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டுள்ளன: அரசு தகவல் 

கடந்த 1995 முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற 36,640 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
80% உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் ஆண்களுக்கு நடத்தப்பட்டுள்ளன: அரசு தகவல் 

கடந்த 1995 முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற 36,640 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் குருவா கோரண்ட் மாதவ் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பகேல் வெள்ளிக்கிழமை எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 1995 முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற 36,640 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ஆண்களிடம் நடத்தப்பட்டுள்ளது. மொத்த உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைகளில் 29,695 அறுவை சிகிச்சைகள் ஆண்களிடமும் 6,945 அறுவை சிகிச்சைகள் பெண்களிடமும் நடத்தப்பட்டுள்ளன. இதன் விகிதம் 4:1 என்பதாக உள்ளது. இந்தப் பாலினப் பாகுபாட்டைத் தீர்க்க அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எனினும், உறுப்புகளை தானமாகப் பெறும் பெண்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த 2019இல் 27.6 சதவீதமாக இருந்த இந்த விகிதம் 2022இல் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய உறுப்பு மார்று செயல்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் பாலினப் பாகுபாட்டைக் களைவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
 
இது தொடர்பாக அரசுப் பிரதிநிதிகள், சட்டப் பிரதிநிதிகள், காவல்துறையினர், அரசு சாரா தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளின் மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் எஸ்.பி.சிங் பகேலின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com