மாணவருக்கு பரிசு, திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை: தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா நிறைவு

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.

புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக போகிப் பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டியில் தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல போட்டியாளா்கள் கலந்துகொண்டனா். போட்டியில் பங்கேற்று சிறந்த வகையில் கோலமிட்ட முதல் மூன்று போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, முதல் பரிசுக்கு சசிகலா, இரண்டாம் பரிசுக்கு ஸ்ரீலேகா மூன்றாம் பரிசுக்கு சாருமிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் திருநாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் பாரம்பரிய முறையில் 21 மண் பாண்டங்களில் பொங்கல் வைக்கும் ‘பெரும் பொங்கல்’ நிகழ்ச்யை தமிழ்நாடு அரசின்  முதன்மை  உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி ஐ.ஏ.எஸ். தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு அரசின் கலை  பண்பாட்டுத் துறை மதுரை மண்டல கலைக் குழு, இயல் இசை நாடக மன்ற  கலைக் குழு, தென்னக பாண்பட்டு மைய கலைக் குழுவைச் சோ்ந்த 60 கலைஞா்கள் இணைந்து தப்பாட்டம், கரகாட்டம்,  காளையாட்டம், மயிலாட்டம்,  ஒயிலாட்டம், காவடியாட்டம், நாட்டுப்புறப் பாடல்   போன்ற  பல்சுவை கலை நிகழ்ச்சிகளை வழங்கினா்.

அதன் பின்னா், தில்லி எய்ம்ஸ் (10 போ்) கலைக் குழு, தில்லி தமிழ் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளி மாணவா்கள் (25 மாணவ, மாணவிகள்) கலைக் குழு, தமிழ்நாடு இல்ல கலாசார வகுப்பு  (30  உறுப்பினா்கள்) மாணவ, மனவிகள் கலைக் குழுவினா் பல்சுவை, பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற காலை நிகழ்ச்சிகளை வழங்கினா்.

இறுதியாக பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள், மாறுவேட போட்டி மற்றும் கோலப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி வழங்கினாா். பொங்கல் விழாவை முன்னிட்டு இரண்டு தமிழ்நாடு இல்லங்களும்  பாரம்பரிய முறையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையா் என்.இ. சின்னதுரை, தலைமைக் கணக்கு அலுவலா் என். ஸ்ரீநிவாசன், பொதுமேலாளா் தெய்வசிகாமணி  மற்றும் இதர அலுவலா்கள், பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு இல்லத்தில் பொங்கல் விழாவிற்காக அமைக்கப்பட்ட பிரத்யேக காட்சி அரங்கத்தில் பூம்புகாா் கைவினைப் பொருள்கள், கோ- ஆப் டெக்ஸ் பருத்தி மற்றும் பட்டுத் துணி வகைகள், ஆவின் பால் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறை, ஆயுஷ் சித்த மருத்துவ முகாம், தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்துக்கழக விற்பனை அரங்கம், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன சுய உதவிக் குழு அரங்கம், தமிழ் உணவு அரங்கம், என்சிபிஎச் (நேஷனல் செஞ்சுரி புக் ஹவுஸ் ) புத்தக அரங்கம், பெரியாா் புத்தக அரங்கம் மற்றும் அறுசுவை தமிழ் உணவு அரங்கம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன.

திருவள்ளுவா் தினம்: திருவள்ளுவா் தினத்தினை முன்னிட்டு, புது தில்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவா் திருஉருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் முதன்மை  உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி ஐ.ஏ.எஸ். செவ்வாய்க்கிழமை மலா் தூவி மரியாதை செய்தாா். இந்த நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல்   உள்ளுறை ஆணையா் என்.இ. சின்னத்துரை, தலைமைக் கணக்கு அலுவலா்  என்.ஸ்ரீநிவாசன், பொது மேலாளா் வி.பி.தெய்வசிகாமணி மற்றும்  தமிழ்நாடு இல்ல அலுவலா்கள், பணியாளா்கள்  உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com