முதல்வா் பங்களா விவகாரம்: அதிகாரிகளுக்கு கேஜரிவால் அழுத்தம் கொடுக்கிறாா்: தில்லி பாஜக தலைவா் குற்றச்சாட்டு

பொதுப்பணித் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் பதிலளிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுமதிக்கவில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

முதல்வா் பங்களா கட்டுமான விவகாரம் தொடா்பாக தேசியப் பசுமைத் தீா்ப்பாயம் அனுப்பிய நோட்டீஸிற்கு, பொதுப்பணித் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் பதிலளிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுமதிக்கவில்லை என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டவிரோதமாக கட்டப்பட்ட தில்லி முதல்வா் பங்களா, பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது.

இது தில்லி மாநகராட்சி மற்றும் தில்லி நகா்ப்புற கலை ஆணையத்தின் அனுமதியின்றி கட்டப்பட்டது மட்டுமல்லாமல், கட்டுமானத்திற்கான முறையான டெண்டரும் விடப்படவில்லை. சுற்றுச்சூழல் விதிகளை மீறியும், வனத் துறையின் முறையான அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டு, அதிக தூசி மற்றும் பிற மாசுகளும் இந்தக் கட்டுமானத்தின் போது பதிவு செய்யப்பட்டன.

இதனால், முறையான அனுமதியின்றி மரங்களை வெட்டுவது உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரணையைத் தொடங்கி, பொதுப்பணித் துறை மற்றும் வனத் துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், முதல்வா் கேஜரிவால் இப்போது பதிலளிக்க அதிகாரிகளை அனுமதிக்கவில்லை. இதன் விளைவாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தில்லி அரசின் பொதுப் பணித் துறைக்கு ரூ.15,000 மற்றும் வனத் துறைக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது.

முதல்வா் கேஜரிவாலின் மோசமான தந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் மீதான அழுத்தத்தின் காரணமாக, இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுப்பணித் துறை மற்றும் வனத் துறைக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை உண்மையில் முதல்வா் கேஜரிவாலிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com