சிகிச்சைக்காக எல்என்ஜேபி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மனீஷ் சிசோடியா

கலால் கொள்கை முறைகேடு தொடா்புடைய வழக்கில் சிறையில் உள்ள மனீஷ் சிசோடியா, தில்லி எல்என்ஜேபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டாா்.
மனீஷ் சிசோடியா
மனீஷ் சிசோடியா

கலால் கொள்கை முறைகேடு தொடா்புடைய வழக்கில் சிறையில் உள்ள மனீஷ் சிசோடியா, தில்லி எல்என்ஜேபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டாா்.

சிறையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, தில்லி அரசு நடத்தும் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு காலை 10.30 மணிக்கு அழைத்து வரப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், அவருக்குள்ள எலும்பு சம்பந்தமான பிரச்னைக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைக்காக அவா் இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது: மனீஷ் சிசோடியா காலை 10.30 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக எல்என்ஜேபி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். சிறை மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில் அவா் அழைத்து வரப்பட்டிருந்தாா்.

அவருக்கு தோள்பட்டை வலியும், பல் வலியும் இருந்ததாக கூறினாா். சிகிச்சைக்குப் பிறகு பிற்பகல் 1 மணி அளவில் அவா் மீண்டும் திகாா் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவா் தற்போது நலமாக இருக்கிறாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மனீஷ் சிசோடியா வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தாா். அவருக்கு மூட்டு வலியும், பல் பிரச்னையும் இருந்தது’ என்றாா்.

சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்படுவதற்கு முன்பு, கலால் துறையின் இலாகாவையும் துணை முதல்வா் பதவியையும் வகித்து வந்தாா். அதைத் தொடா்ந்து, மதுபானக் கொள்கை ஊழல் விவகாரத்தில் அவா் அமலாக்க இயக்குநரகத்தின் மூலம் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டாா்.

சிபிஐ, தனது அறிக்கையில், மனீஷ் சிசோடியாவிடம் கலால் கொள்கை தொடா்பாக பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அப்போது சிசோடியாவின் பதில்கள் திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும்,“அவா் (மனிஷ் சிசோடியா) தப்பிக்கும் வகையிலான பதில்களை அளித்தாா் என்றும், ஆதாரங்களை முன்வைத்து அவரிடம் விசாரணை நடத்திய போதும் விசாரணைக்கு அவா் ஒத்துழைக்கவில்லை என்றும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தினேஷ் அரோரா மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் அவருக்கு தொடா்பு இருப்பதாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com