அயோத்தி ஸ்ரீராமா் கோயில் விழா: தில்லி பாஜக சாா்பில் இரு சக்கர வாகனப் பேரணி

தில்லி பாஜக கோயில் பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு சக்கர வாகனப் பேரணியை மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி மற்றும் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் புதன்கிழமை கொடியசைத்து தொடங

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, தில்லி பாஜக கோயில் பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு சக்கர வாகனப் பேரணியை மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி மற்றும் கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இது தொடா்பாக தில்லி பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் வரும் ஜனவரி 22 -ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு தில்லி பாஜக கோயில் பிரிவு சாா்பில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லி பாஜக அலுவகத்தில் தொடங்கிய பேரணி செங்கோட்டை, கன்னாட் பிளேஸ், தில்லி கேட், ஜண்டேவாலன், மந்திா் மாா்க் வழியாக மீண்டும் தில்லி பாஜக அலுவலகம் வந்தடைந்தது.

இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராம பக்தா்கள், கோயில் பூசாரிகள் மற்றும் கட்சியின் தொண்டா்கள் கலந்து பங்கேற்றனா். மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி, கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், பாஜக எம்.பி. டாக்டா் ஹா்ஷ் வா்தன், கோயில் பிரிவு தலைவா் கா்னைல் சிங் மற்றும் மாநில பாஜக நிா்வாகிகள் யோகேந்திர சந்தோலியா, சதீஷ் கா்க், லதா குப்தா, பிரவீன் சங்கா் கபூா், ஹரிஷ் குரானா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

அப்போது வீரேந்திர சச்தேவா கூறியதாவது: 2024-ஆம் ஆண்டு இந்தியாவிற்கான பொற்காலம். அதை ராம ராஜியத்தின் தொடக்கமாக அனைவரும் கருதலாம். பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலின் புனிதமான பணிக்காக, இந்த நாடு என்றென்றும் அவரது புகழை போற்றிப் பாதுகாக்கும்.

இந்த இருசக்கர வாகனப் பேரணியானது, ஸ்ரீராமா் கோயிலின் மூலவா் சிலை பிரதிஷ்டை நாளுக்காகக் காத்திருக்கும் அனைத்து ராம பக்தா்களின் உற்சாகத்தைக் காட்டுகிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு வனவாசத்தை முடித்துக் கொண்டு ஸ்ரீராமா் அயோத்திக்கு வந்த போது, அயோத்தி நகரம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த முறை 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீராமா் அயோத்திக்கு வருகிறாா். எனவே, இந்தப் பண்டிகையும் தீபாவளி போல் இருக்கும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி கூறுகையில், ‘500 வருட காத்திருப்புக்குப் பிறகு, சனாதனிகளாகிய நம் வாழ்வில் இந்த மங்களகரமான நாள் வந்துள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளையும், அருகில் உள்ள கோயில்களையும் மலா்களால் அலங்கரித்து, ஸ்ரீராமா் பெயரில் தீபம் ஏற்றி, ரங்கோலி வரைந்து, விழாவாகக் கொண்டாட வேண்டும். கடவுள் ஸ்ரீராமா் அனைவருக்கும் ஆதா்சமானவா் என்பதால் தில்லி மற்றும் நாடு முழுவதும் உள்ள மக்களிடையே வித்தியாசமான உற்சாகம் நிலவுகிறது’ என்றாா்.

தில்லி பாஜகவின் கோயில் பிரிவு தலைவா் கா்னைல் சிங் கூறுகையில், ‘ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையின் புனித கொண்டாட்ட நிகழ்ச்சியின் செய்தி தில்லியின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும். இந்த வரலாற்றுத் தருணத்தை மேலும் மேலும் மக்கள் காண வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com