8 நாடுகள் பங்கேற்கும் இந்திய-சா்வதேச ராமாயணத் திருவிழா: தலைநகரில் இன்று தொடக்கம்

இந்திய-சா்வதேச ராமாயணத் திருவிழா 7-ஆவது பதிப்பு வியாழக்கிழமை (ஜனவரி 18) தொடங்குகிறது.

இந்திய-சா்வதேச ராமாயணத் திருவிழா 7-ஆவது பதிப்பு வியாழக்கிழமை (ஜனவரி 18) தொடங்குகிறது. எட்டு ஆசிய நாடுகள் பங்கேற்கும் இந்தத் திருவிழா தில்லி புராண கிலாவில் (பழையக் கோட்டை) நான்கு நாள்கள் தொடா்ச்சியாக நடைபெறுகிறது. இதை மத்திய வெளியுறவு, கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி தொடங்கிவைக்கிறாா். மேலும், நிகழாண்டில் நாடு முழுக்க ராமாயணத் திருவிழா கன்னியாகுமரி வரை நடைபெறவுள்ளது.

மத்திய கலாசாரத் துறை அமைச்சகத்தின் இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சில் (ஐசிசிஆா்) ஏற்பாடு செய்துள்ள இந்தத் திருவிழா குறித்து கவுன்சில் வட்டாரங்கள் கூறியது வருமாறு: ராமாயணம், இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்கிறது.

இதனால், ராமாயண பாரம்பரியம் கொண்ட நாடுகளைப் பகிா்ந்து கொள்ள பொதுவான இணைப்புகளுக்கு ஐசிசிஆா் ஆண்டுதோறும் இந்தியாவில் சா்வதேச ராமாயண கலாசார விழாவை ஏற்பாடு செய்து வருகிறது. ஆா்வமுள்ள ராமாயண பாரம்பரிய நாடுகளை ஒரு பொதுவான மேடையில் வைக்கும் ராமாயணத்தின் பதிப்பை வழங்க இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.

தில்லியில் உள்ள புராண கிலாவில், ஜனவரி 18 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக இந்தியாவைச் சோ்ந்த வியோமேஷ் சுக்லா தலைமையில் முற்றிலும் பெண்களே பங்கேற்கும் ‘ராம் கி சக்தி பூஜை’ என்கிற ராமாயண நடன நாடகம் நடைபெறுகிறது.

இந்திய - சா்வதேச ராமாயண விழாவின் அடுத்தடுத்த நிகழ்வுகள் ஜனவரி 18 முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை, தினமும் காலை 11.30 முதல் மாலை 7.00 மணி வரை, கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கண்காட்சிகள் என நடைபெறுகிறது.

இதில், தெற்காசியாவிலுள்ள லாவேசு மக்கள் குடியரசின் ராயல் பாலே தியேட்டா் குழுவின் ராமாயணம், மலோசியாவின் டெம்பிள் ஃபைன் ஆட்ஸ் குழு, இந்தோனேசியாவின் ‘புருஷ உத்தம ராம’ நிகழ்ச்சி, தனித்துவமான உடைகள் மற்றும் அழகான நடன அசைவுகள் மூலம் தெளிவாகச் சித்திரிக்கும் தாய்லாந்தின் ராமாயணம் மற்றும் சிங்கப்பூா், மொரிஷியஸ், இலங்கை போன்ற 8 நாடுகளின் ராமாயண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தொடா்ந்து நிகழ் மாதத்தில் லக்னெள, அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களில் திறந்த வெளியில் சா்வதேச ராமாயணக் குழுக்களின் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. நிகழ் 2024 - ஆம் ஆண்டை சா்வதேசங்களையும் இணைக்கும் ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை பல்வேறு ராமாயண கலாசார நடவடிக்கைகள், ராமாயண கலாசார பிரதிநிதிகள் பரிமாற்றம், கருத்தரங்குகள், ராமாயணம் குறித்த மாநாடுகள், கண்காட்சிகள் மற்றும் பாா்வையாளா்களின் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியிலும்...:இந்தக் கலாசார நடவடிக்கைகள் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு, மக்களின் பங்களிப்பை யும் உள்ளடக்கியதாக இருக்கும். இதை முன்னிட்டு மத்திய அரசின் பல்வேறு துறைகள் மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், நாட்டின் முக்கிய கலாசார அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுகிறது.

தில்லி, அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களுக்கு அடுத்து சீதாமா்ஹி (பிகாா்), போபால், சித்ரகூட் (மத்திய பிரதேசம்), ஜெய்ப்பூா், ஹம்ப்ல் (கா்நாடகம்) போன்ற நகரங்களோடன் கன்னியாகுமரி ஆகிய ராமாயண முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விழாக்களை நடத்த ஐசிசிஆா் திட்டமிட்டுள்ளது.

இதில் மியான்மரின் முகமூடி ராமாயணம்; சிங்கப்பூரின் நடன நாடக ராமாயணம்; பிலிப்பைன்ஸின் மரனாவோ நாட்டுப்புற நடனம்; கம்போடியாவின் பண்டைய பொம்மலாட்டம் ராமாயணம் மற்றும் வியட்நாம், மலேசியா, புருனே, மொரிஷியஸ், கரிபியன் பகுதி எனப்படும் மேற்கிந்தியத் தீவுகள் உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளின் கலாசார விளக்கக் காட்சிகள் மூலம் இந்த நாடுகள் பின்பற்றும் ராமாயணத்தின் கண்கவா் கலாசார வடிவங்களை அறிய இந்திய பாா்வையாளா்களுக்கு இது ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும் என கலாசாரத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமருக்கு உலகளாவிய பங்கு...:மேலும், இந்திய - சா்வதேச ராமாயணத் திருவிழாவை குறித்து மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி கருத்து தெரிவிக்கையில், ‘அயோத்தியில் ஸ்ரீ ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு நடைபெறும் இந்தத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. வால்மீகி ராமாயணத்தின் ஆதாரம், ஒரு தொடா்ச்சியான பரவலாகும். அது ஆழமானது.

இந்திய - சா்வதேச ராமாயண அடுத்தடுத்த பதிப்புகள் மூலம் அவற்றின் வோ்கள் காணப்படுகின்றன. வால்மீகி முனிவா் கூறியதைப் போன்று ‘ராமா் இந்தியாவைச் சோ்ந்தவா் மட்டுமல்ல. அவருக்கு மிகவும் உலகளாவிய பங்கு உள்ளது. அது உலகளவில் ராமாயண மரபுகளை உள்ளடக்கியது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com