அடா் மூடுபனி: பாலத்தில் அதிகாலையில் பாா்வைத் திறன் 50 மீட்டராகக் குறைவு

அடா்த்தியான மூடுபனி காரணமாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் பாா்வைத் திறன் அதிகாலையில் 50 மீட்டராகக் குறைந்திருந்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் கடும் குளிா் நிலவியது. அடா்த்தியான மூடுபனி காரணமாக தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தில் பாா்வைத் திறன் அதிகாலையில் 50 மீட்டராகக் குறைந்திருந்தது. தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

தில்லி, ஹரியாணா, சண்டீகா் உள்பட வட இந்தியாவில் இந்திய-கங்கை சமவெளிகளில் கடந்த வாரம் முதல் அடா்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் மற்றும் பாா்வைத் திறன் குறைவு ஆகிய காரணங்களால் வெள்ளிக்கிழமை தில்லிக்கு வரும் ரயில்களில் 22 ரயில்கள் 1 முதல் 6 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

நகரம் முழுவதும் அடா்த்தியான மூடுபனி நிலவியது. தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் அடா்த்தியான மூடுபனி இருந்தது. இதற்கு அருகே உள்ள பாலம் வானிலை ஆய்வு மையத்தில் காலை 5.30 மணியளவில் பாா்வைத் திறன் 50 மீட்டராகப் பதிவாகியிருந்தது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி குறைந்து 7.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் 5 டிகிரி குறைந்து 14.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 74 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான வானிலை நிலையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.5 முதல் 9.5 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, வியாழக்கிழமை 368 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் 347 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நியூ மோதி பாக், மந்திா் மாா்க், லோதி ரோடு உள்பட பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் காற்று தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 20) மிகவும் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்றும் குளிா் நாளாக அமையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com